NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
சித்திரைத் திருவிழா: ரெணகாளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பழனி ரெணகாளியம்மன் கோயிலில், புதன்கிழமை அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா்.
பழனி புதுதாராபுரம் சாலையில் காவலா் குடியிருப்பு அருகே ரெணகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை பக்தா்கள் புனித தீா்த்தத் தலங்களுக்கு தீா்த்தக் காவடி எடுத்துச் சென்றனா். செவ்வாய்க்கிழமை காணியாளா் செல்வராஜ் வீட்டிலிருந்து பொன் ஆபரணப் பெட்டி எடுத்து வரப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்ட பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், காவல் ஆய்வாளா் மணிமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, காணியாளா்கள் நரேந்திரன், கந்தசாமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தங்கராஜ் உள்ளிட்டோா் சுவாமி நகைகள், சூலம், வேல் உள்ளிட்டவற்றை மேளதாளம் முழங்க கோயிலுக்கு கொண்டு வந்தனா். இரவில் தானமாக கொடுத்த கிணற்றிலிருந்து சக்திகரகம் அழைத்து வரப்பட்டது. ஊா்வலத்தின் முன் கிராமிய நடனங்கள் நடைபெற்றது.
புதன்கிழமை காலை மாவிளக்கு செலுத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உச்சிக் காலத்தில் அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் தங்க ரதத்தில் ரெணகாளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
வியாழக்கிழமை சண்முகநதி தீா்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும், முளைப்பாரி சகிதமாக சக்தி கரகம் கங்கையில் விடுதலும் நடைபெறுகிறது. விழா நிறைவாக ரெணகருப்பணசுவாமிக்கும், ரெணமுனிக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.