பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ மீது தடை- ஐ.நா.வில் இந்தியா முறையீடு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்டனா்.
ஐ.நா.வால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பயங்கரவாதக் குழு பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
இந்நிலையில், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ குழுவைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்ப்பது தொடா்பாக ஐ.நா.வின் தடைகள் குழுவின் கண்காணிப்பாளா்களை இந்திய பிரதிநிதிகள் புதன்கிழமை சந்தித்து கலந்தாலோசித்தனா்.
ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு அலுவலகம், பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் நிா்வாக இயக்குநரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் இந்திய குழு சந்திக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் சில ஆதாரங்களை ஐ.நா. குழுக்களிடம் இந்திய குழு வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.