செய்திகள் :

சலசலக்கும் நீரில் படர்ந்த ஈரம் - ரீட்டா டவ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 5

post image

நீங்கள் வேலை முடிந்து சோர்வாகப் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும்போது யாரேனும் அருகில் வந்து இருக்கையிலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார்களா? வெளியில் சொல்ல முடியாதவற்றை மௌனமாகக் கடந்து செல்வதும், பேச முடிந்ததைப் பேச்சு மொழியிலோ எழுத்து மொழியிலோ வெளிப்படுத்துவதும் சமூகத்தின் இயல்பே என்றாலும் கவிஞர்கள் புறவாழ்வியலின் நிகழ்முறைகளைப் படைப்புக்கான கச்சாப்பொருட்களாக எடுத்துக்கொண்டு சமூகக் கவிதைகளில் புற யதார்த்தத்தை மையப்படுத்துகின்றனர்.

கவிஞர் ரீட்டா டவ்

கவிதையின் வழியாகச் சமூக அரசியலை, போதாமைகளை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்வது எளிதாக அமைவதில்லை. கவிதைகளில் செய்திகளை முன்னிருத்த வேண்டுமானால் அதைப் பற்றிய தெளிவு மட்டும் இருந்தால் போதாது, அது சார்ந்திருக்கும் வாழ்வியல் அனுபவங்களும் சமூகக் கட்டுப்பாடுகளும் கவிதையுணர்வுகளை எழுப்பிவிடுவதால் சிறந்த கவிதையாக நின்றுவிடுகிறது.

சமீபத்தில் சிங்கப்பூரிலுள்ள கினோகுனியா புத்தகக் கடைக்குச் சென்றேன். பாதி முகத்தை மட்டும் காட்டிக்கொண்டு எதிரில் நின்றுகொண்டிருந்த நூல் கவனத்தை ஈர்த்தது. 1974 முதல் 2004 வரை எழுதபட்ட ரீட்டா டவ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு அது. எப்போதும் நூல்களை வாங்குவதற்கு முன் முன்னுரை, பின்னுரைகளை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு வாங்கவேண்டுமென ஆசிரியர் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது.

கவிஞர் ரீட்டா டவ்

நானூறு பக்கங்களைக் கொண்ட பெரும்புத்தகத்தின் பின்னட்டையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் குறிப்புகள் ‘முற்றிலும் பிரமிக்க வைக்கக்கூடிய படைப்பு, சமகாலக் கவிஞர்களுள் வெகுசிலரே இவ்வளவு திறமையானவர்களாக, தீவிரமானவர்களாக, வாசிப்பதற்கு இனிமையான கவிதைகளைத் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்’ என்று பார்த்தவுடன் கவிதைகளை நான் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியில் நூல் என்னோடு நடந்து வீட்டிற்கு வந்துவிட்டது.

‘மனிதர் மிகவும் இனியர்’ என்று பாரதி சொன்னாலும் எந்தவகை இலக்கணத்திற்குள்ளும் அடங்கிவிடாமல் மனிதர்களால் அடக்கியாளப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு அடுக்கடுக்கான கவிதைகளையும் மனிதத்தன்மையின் உள் மனத் தேடலுக்கான கவிதைகளையும் படைத்தவராகத் தெரிகிறார் ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான ரீட்டா டவ்.

தாமஸ் மற்றும் பியூலா என்ற கவிதைத் தொகுப்பிற்காகப் புலிட்சர் பரிசைப் பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர். ஆசிரியராகப் பணிபுரிந்தவர், நாடகங்களையும் நாவல்களையும் எழுதி பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர். பெரும்பாலும் கறுப்பினத்தவரின் சிக்கல்கள், அவலங்கள் இவரது படைப்புகளில் விரவிக்கிடக்கின்றன. கறுப்பினத் தடைகளைத் தாண்டி முக்கியமான பிரச்சினைகளைத் தன் எழுத்தில் தைரியமாக முன்வைத்ததால் அவருடைய சமூகக் கருத்துகளுக்காகக் கொண்டாடப்படுகிறார். ரீட்டாவின் இயல்பெழுச்சியில் உயிர்பெறும் கவிதைகள் வேறெந்த திசையையும் திரும்பிப்பாராது சமூகத்தின் சாடலைப் பதிவு செய்கின்றன.

கவிஞர் ரீட்டா டவ்

ரோசா பார்க்ஸுக்குப் பேருந்தில் கிடைத்த அனுபவம் என்பது வெறும் நிகழ்வாக மட்டுமல்லாமல் வரலாற்றுப் பின்னணியுடன் சமூகப் பிரச்சனைகளையும் அலசுகிறது. இன எதிர்ப்பைத் தெரிவிக்கும் மிகச் சிறிய கவிதை என்றாலும் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கியதோடு அமெரிக்கச் சமூகப் பிரச்சனைகளுக்கான எதிர் குரலாகவும் அமைந்தது.

ரோசா பார்க்ஸின் பேருந்தில் ஏறி முன்பக்கத்திற்குச் சென்று அமர்ந்திருக்கிறாள். வெள்ளையருக்கு இடம் கொடுப்பதற்காக அவளை எழச் சொல்கிறார்கள். பேருந்தில் அவ்வளவுபேர் இருந்தாலும் ரோசாவை மட்டும் குறிப்பிட்டு எழச் சொல்வதையும், பேருந்தின் முன்வரிசையில் அவள் அமருவதை மறுத்த காட்சியையும் எடுத்துச்சொல்லும் கவிதை இது.

ரோசா

அன்று பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது

ரோசா பார்க்ஸ் மிகவும் சோர்வாக இருந்தாள்

அன்றைய வேலையினால் அல்ல

அவள் நின்றுகொண்டேயிருந்ததால்

பாதங்கள் வலித்தன

பேருந்து நிறுத்தத்திற்கு

வெகுதூரம் நடந்து வந்ததால்

அவளது கால்கள் வலித்தன

அதனால் பேருந்தின் முன்வரிசையில்

அமர்ந்துகொண்டாள்

அவள் புத்துணர்வோடு இருக்கிறாள்

இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறாள்

நீண்ட காலமாகப் போராடி

வெற்றியை நெருங்கும் தருவாயிலிருப்பதுபோல்

திடமாக இருக்கிறாள்.

இப்போது அவளிடம்

ஒரு வெள்ளையருக்கு இருக்கையைக்

கொடுப்பதற்காக எழச் சொல்கிறார்கள்

ஆனால் அவள் நகரவில்லை.

பேருந்தில் கூட்டம் நிரம்பியிருந்தாலும்

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து

இப்படியான குரலை

எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்

அந்தப் பேருந்தில் ரோசா பார்க்ஸிடம் மட்டுமே

இப்படிக் கேட்கிறார்கள்

ஆனால் அவள் முடியாதெனச் சொல்லிவிட்டாள்.

கவிஞர் ரீட்டா டவ்

பார்க்ஸிக்கு நடந்தது வெறும் தனிப்பட்ட மனிதருக்கானது மட்டுமல்ல, எல்லோருக்கும் நடக்கக் கூடியது, குறிப்பாகக் கறுப்பினத்தவருக்கு நடப்பது உரிமைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் எழுப்பப்பட்ட குரலாக இருந்ததால் மாற்றுச் சிந்தனைக்கான எதிர்ப்பைக் கிளப்பியது. ரீட்டா இதன் மூலம் சமூகப் போராட்டத்தை முன்னிருத்தி நிறத்தின் சிக்கலான உணர்வுகளைச் சொற்களின் மீது ஏறி நடந்துசெல்ல வைத்திருக்கிறார், அதனாலேயே இக்கவிதை கனக்கிறது.

கிளிண்டன் ஆட்சியில் இருந்தபோது வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்தார் ரீட்டா. அதன் பிறகு ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கவிதை இரவில் இதயம் பற்றி வாசித்த கவிதை இது.

இதயத்தோடு இதயம்

இது

சிவப்பாகவோ

இனிப்பாகவோ இல்லை

இது உருகவோ

மாறவோ இல்லை

இது உடையவோ

கடினமோ இல்லை

இதற்கு வலியையோ

ஏக்கத்தையோ

வருத்தத்தையோ

உணர முடியாது!

என் இதயத்தை வெளியில் எடுக்கமுடியாது, அதனை ஆடையாக அணியமுடியாது என்றாலும் அதைத் திறக்கக்கூடிய சாவி என்னிடமில்லை. ஆனால் என் இதயம் எதை உணர்கிறது என்பதைச் சொல்லமுடியும், என் இதயம் உங்களுக்கானது, அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்னையும் சேர்த்தே, என்று சொல்லி முடிக்கிறார்.

கவிஞர் ரீட்டா டவ்

அரசியல் சூழலில் நெகிழ்வுத்தன்மையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கவிதையான ‘நிலைமை சகிக்க முடியாது’ என்ற தலைப்பே எதிர்க்கிறது. இந்நிலப்பரப்பு நம்மைச் சுற்றி இருட்டாகவும், தீப்பிழம்புகளாகவும் இருந்தாலும் நாம் ஓர் ஓடையில் பிறந்ததால் துடுப்பினால் அடிப்பதோ, சிறுநீர் கழிக்க ஓரிடம் இல்லையென்று சொன்னாலோ என்ன செய்யமுடியுமென்ற கேள்விகளை முன் வைக்கிறது.

அன்றாடப் போக்குகளை எதிர்ப்பது மட்டுமல்ல அதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் சிறுபான்மை சமூகம் முடங்கிக் கிடக்கிறது. இதே நிலைமை தொடர்ந்து கொண்டிருப்பதால் அதனைச் சகிக்க முடியாது என்றாலும் அதைவிட மோசமானது இங்கே உட்கார்ந்து எதுவும் செய்யாமல் மௌனமாக அமர்ந்திருப்பது பெருங்கொடுமையென ஆற்றாமையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது. இப்படியாக இவரது பல கவிதைகள் தீவிரத்தைச் சித்திரிக்கின்றன.

பத்தாயிரம் தலைகள்

குச்சிகளில் ஊன்றியவாறு

மிதந்து திரிகின்றன.

அவற்றில் ஒரு விழி

என்னை நோக்கியாலும்

இப்போது அது

ஓர் உதையாக இருந்தாலும் —

அதை விட வழியில்லை.

அதையேதான் இன்று நான்

சுதந்திரம் என்று அழைக்கிறேன்,

நீதி என்றும் சொல்கிறேன்,

நமக்கான ஐஸ்கிரீம் என்றும் நம்புகிறேன்

கவிஞர் ரீட்டா டவ்

சுதந்திரம்: பறவையின் பார்வையில் என்ற இக்கவிதை நீதியின் அடித்தளத்தைச் சீண்டுகிறது. கல்லூரியில் அமர்ந்து ஓய்வு நேரத்தில் நாவல் ஒன்றை வாசித்துக்கொண்டே ஐஸ்கிரீம் சாப்பிடும் நேரத்தில் இக்கவிதை தோன்றியதாகக் குறிப்பிடுகிறார். ரீட்டாவின் சில கவிதைகள் நீண்ட வரிகளுடன் கட்டுப்பாடின்றி உரை நடைபோல் நீள்கின்றன. பெரும்பான்மையான கவிதைகள் திரும்பக்கூறுதல் தன்மையில் கலையின் வழியாக எதிர்வினையை மையப்படுத்துகின்றன.

ரீட்டா தனது அடையாளம் மற்றும் நிறத்தைத் தாண்டி உடல்மொழியையும் ஆப்பிரிக்க, அமெரிக்க அனுபவத்தையும் பேசுகிறார்.

ஓரளவே காதல் கவிதைகள் என்றாலும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு அவரைப் பற்றி ஓரளவு புரிதலை எனக்குத் தந்தது எனச்சொல்லலாம். சமகாலக் கவிஞர்களுள் வெகு சிலரே இவ்வளவு திறமையானவர்களாக, தீவிரமானவர்களாக இருக்கிறார்கள் என்ற குறிப்பு உண்மைதான்.

கல்லின் மீதிருக்கின்ற மீன் என்ற கவிதை,

கல்லின் மீதிருக்கின்ற மீன்

திரும்பவும் கடலில் விழவே

விரும்புகிறது.

அவனைத் துளைக்கும்

விவரனைகள் சிறிதாகவும்

ஊகிக்கத்தக்கதுமான உண்மைகள்

அதையெல்லாம் இப்போது

சலிப்பாகவே உணர்கிறான்.

வெளிச்சத்திற்கு வருவதற்காக

தயாராக வெளியில் காத்திருக்கையில்

அவனது சுயவிவரம்

வெள்ளை ஒளியால்

முத்திரையிடப்படுகிறது

கடலில் அமைதி மட்டும் தான்

அசைவுடன் மெல்ல மெல்ல நகர்கிறது

அதில் தேடுகின்ற

எதுவும் தேவையில்லை

பொறுமையாகத் தேங்கி,

தனது எலும்புகள் மலராக

விரியும் தருணத்தை எதிர்பார்த்து

மிதந்து கொண்டிருக்கிறான்.

கல்லின் மீதிருக்கும் மீன்

தோல்வியென்பது

வாழும் உயிர்களுக்கு

ஏதேனும் நன்மை தருமென்பதை

அது அறிந்தே வைத்திருக்கிறது

அந்த எறும்பு எப்படி

ஒரு குற்றவாளியின் இறுதி பயணத்தை

வண்ணமாகவும் பளபளப்பாகவும்

மாற்றிவிடுகிறது என்பதை

அவன் அறிந்தே வைத்திருக்கிறான்

அந்த விஞ்ஞானி

ரகசியமாய் மகிழ்ச்சியில்

பனையிலையின் விளிம்புகளைப்

போலிருக்கும் பிரெய்லி

எழுத்துகளைத் தட்டுகிறான் என்பதை

அவன் அறிந்தே வைத்திருக்கிறான்

கவிஞர் ரீட்டா டவ்

இயற்கையும் பகுத்தறியும் மோதுதலை ஒரு மீன் கல்லில் சிக்கிக்கொண்டிருக்கும் உருவகத்தின் வழியாக ஆழமாக வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையின் அடிப்படை உணர்வுகளை இணைக்கும் இக்கவிதை, எல்லாவற்றையும் பகுத்தாய்தல் இயற்கையோடு ஒன்றிவிடாது, ஆனாலும் ஒட்டுமொத்த அனுபவத்தால் வாழ்க்கையை உணர முடியும் என்பதை வெளிக்கொணருகிறது.

‘நாள் நட்சத்திரம்’ (Daystar) எனும் கவிதை, புலிட்சர் பரிசு பெற்ற Thomas and Beulah என்ற தொகுப்பில் உள்ளது. இது அவரது தாத்தா, பாட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு. 'Beulah' என்பது திருமணமான பெண்களைக் குறிக்கும் சொல்லாகவும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இக்கவிதை, வீட்டுப் பணி மற்றும் தாய்மையின் பொறுப்புகளுக்கிடையில், ஒரு பெண் தனக்கெனச் சற்றே இளைப்பாரும் சுயதருணங்களைத் தேடும் முயற்சியைத் துல்லியமாகவும் அமைதியற்ற மனநிலையையும் எடுத்துச்சொல்கிறது.

சிந்திக்கத் தகுந்த

சிறிய ஓர் அறை தேவைப்பட்டது அவளுக்கு;

ஆனால் அவள் பார்த்தது—

வெதுவெதுப்பாய்க் காய்ந்துகொண்டிருந்த

டயப்பர்களின் கூசல்,

கதவுக்குப் பின்னால் சாய்ந்திருந்த

ஒரு பொம்மையின் நிசப்த நிலை…

குழந்தைப் பராமரிப்பு போன்ற வேலைகளில் நாளும் ஈடுபடுகின்ற பலர், குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள், தங்களது உடலும் உள்ளமும் சுமக்கும் உழைப்பின் வழியாக நிலப்பரப்பை உற்று நோக்கும் வரிகளே இவை. அவற்றில் மறைந்து கிடப்பது, அவர்களின் இல்லறக் கட்டாயங்கள் மட்டுமல்ல, சமூகத்தின் மறைமுகமான பார்வைகளும் ஆகும்.

அழகியலோடு கூடிய கவிதைகள், விமர்சனங்கள் மற்றும் அரசியல் உணர்வுகளைத் தனது படைப்புகளில் திறமையாகப் பதிவு செய்த ரீட்டா டவ், அமெரிக்கக் கவிதை மற்றும் இலக்கியம் ஒளிர்வதற்காகத் தன்னிகரற்ற பங்களிப்புச் செய்துள்ளார் என்று பராக் ஒபாமா பாராட்டுகிறார்.

கவிஞர் ரீட்டா டவ்

இருப்பினும், தனது தனிப்பட்ட அனுபவங்களை வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களுடன் நவீன கவிமனோபாவத்தில் பின்னியதால், இக்கவிதைகள் பரவலாகப் பேசப்பட்டன.

ரீட்டா எழுத நினைத்த வரிகள் அவரது விரல்களில் குவிந்து அவரது கனவுகளைக் கவிதைகளாக்கியிருக்கின்றன. சப்தமற்ற நிலவொளியில் பறந்தலையும் உணர்வுகளை, எல்லோரின் பார்வைக்கு எட்டும் உணர்வு வெளிச்சத்தைச் சொற்களின்றி எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?

சலசலக்கும் நீரில் தான் ஈரம் படர்ந்திருக்கிறது.

-சொற்கள் மிதக்கும்.

வண்ணத்துப்பூச்சியை அழைத்த மலர் - கமலாதாஸ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 4

மிதந்துகொண்டிருக்கும் நீர்க்குமிழைப் போல் நடந்துசெல்லும் ஒரு பெண் எழுதுவதற்கான காரணம் எதுவாக இருக்க முடியும்? அகத்தில் உள்ளதை எப்படியாவது எழுதிவிட வேண்டுமென்ற துடிப்புடன் எப்போதும் இருப்பது சாத்தியமா?... மேலும் பார்க்க