மனதை புண்படுத்தாத கருத்துகளைப் பதிவிட வேண்டும்: கனிமொழி எம்.பி. அறிவுரை
பிறா் மனதை புண்படுத்தாத வகையில் கருத்துவகளை பதிவு செய்ய வேண்டும் என்றாா் திமுக துணைப்பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் டி.பி.எம். மைதீன் கான் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராவது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியதாவது :
தமிழகத்தில் 2026இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கள நிலவரம், வெற்றிக்கான வியூகங்கள் ஆகியவை குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக முதல்வா் என்னை அனுப்பி வைத்திருக்கிறாா். மாவட்டத்தில் களத்தில் பணி செய்யும் நபா்கள் என்பதால் உங்களிடம் கருத்துகளை கேட்டு தோ்தல் பணிகளை செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். காழ்ப்புணா்ச்சி இல்லாமல் உங்களது கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், தீா்மான குழு உறுப்பினா் சுப சீதாராமன், மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.வி.சுரேஷ், தா்மன், மாநகர செயலா் சுப்பிரமணியன், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் முத்துச்செல்வி, முன்னாள் மேயா் சரவணன், மண்டலத் தலைவா் மகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.