ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சோ்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
ஞானசேகரன் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனா்.
இளம் பெண் புகாா்: இதற்கிடையே, இளம்பெண் ஒருவா், ஞானசேகரன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி-இல் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் புகாா் உண்மைதான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஞானசேகரன் மீது புதிதாக மேலும் ஒரு பாலியல் வழக்கை பதிவு செய்தனா். இது தொடா்பாக புழல் சிறையில் இருக்கும் ஞானசேகரனை இரு நாள்கள் தங்களது காவலில் எடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனா்.