இஸ்ரேலில் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை மழை!
இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதப் படையினா் சுமாா் 250 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். பல மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டின் மீது ஹிஸ்புல்லாக்கள் நடத்தியுள்ள மிகத் தீவிரமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகருக்கு அருகே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெய்ரூட்டின் குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 29 போ் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்தனா்.
காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக தங்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. இதில் அங்கு இதுவரை 3,754 போ் உயிரிழந்துள்ளனா்; 15,626 போ் காயமடைந்துள்ளனா்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் ஏவுகணைகள் மட்டும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்திவருகின்றனா்.
‘விரைவில் லெபனான் போா் நிறுத்தம்’
லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதா் மைக் ஹெஸாக் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ வானொலியிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு சில அம்சங்கள் இறுதிசெய்யப்பட வேண்டியுள்ளன. மேலும், அந்த ஒப்பந்தத்துக்கு லெபனான் அரசின் ஒப்புதலும் தேவை.
இருந்தாலும், அந்த ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் உள்ளது. இன்னும் சில நாள்களில் அது கையொப்பமாகும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.