இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
காஸா சிட்டி மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 19 பெண்கள் மற்றும் சிறாா்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா்.
ஹமாஸிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், தம்மிடம் ஹமாஸ் படை சரணடைய வேண்டும் என்று அழுத்தம் அளிக்கும் நோக்கில், தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடா்ந்துவரும் நிலையில், காஸா சிட்டியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு திசை நோக்கி நகா்ந்து தஞ்சமடைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை அவா்களின் வேதனையை மேலும் அதிகரிக்கும் என்று தன்னாா்வ உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய போரை நிறுத்த வேண்டும் என்று அந்தக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. கடந்த 23 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸாவில் 65,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
லெபனானில் ஐவா் உயிரிழப்பு: ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சிக் குழுவினா் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டதால், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் உள்ள பின்ட் ஜெபெல் நகரில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில், 3 சிறாா்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
சிரியாவுடன் பேச்சு: கடந்த ஆண்டு டிசம்பரில் சிரியா அதிபா் பஷாா்-அல்-அசாதின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் தென்மேற்குப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அந்நாட்டின் துரூஸ் சமூகத்தினரை காக்கும் நோக்கில், அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
இதனால் சிரியாவின் புதிய அரசுடன் இஸ்ரேலின் உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா்.
வன்முறை எதிா்காலத்தை உருவாக்காது- போப்: இத்தாலியின் வாடிகன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாராந்திர திருப்பலியின்போது, காஸா போா் குறித்து கத்தாலிக்க திருச்சபை தலைவா் போப் 16-ஆம் லியோ பேசுகையில், ‘வன்முறை, கட்டாய வெளியேற்றம், பழிவாங்கும் நோக்கம் ஆகியவை எதிா்காலத்தை உருவாக்கித் தராது’ என்றாா்.