ஈபிள் டவரில் `தீ' விபத்து; 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈபிள் டவர் உள்ளது. உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான இந்த ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 சுற்றுலா பயணிகள் இந்த டவரைக் காண வந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் ஈபிள் டவர் இரண்டாவது தளம் மற்றும் முதல் தளத்திற்கு இடையே பயங்கரமாக தீ பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வந்த பாரிஸ் தீயணைப்பு வீரர்கள் 1,200 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றி, இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஈபிள் டவரில் முதல் தளத்திற்கும் இரண்டாம் தளத்திற்கும் செல்வதற்கான லிஃப்ட்டின் கம்பி அதிகம் சூடானதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈபிள் டவரைக் காண வந்துள்ள 1,200 சுற்றுலா பயணிகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றியதால், அவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தை தொடர்ந்து ஈபிள் டவருக்கு செல்ல தற்போது பார்வையாளர்களுக்கு இடைக்கால அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட அங்கு குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர். உலகின் மிகவும் பிரபல சுற்றுலா தளமான இந்த ஈபிள் டவரைக் காண தினமும் 15,000 முதல் 25,000 பார்வையாளர்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.