ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட்பாளர் சீதாலட்சுமி?
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதுவரை 9 சுயேச்சைகள் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மாரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. முதுகலை ஆராய்ச்சிப் பட்டம் பெற்றிருக்கும் சீதாலட்சுமி 13 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி உள்ளார். நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த பின், ஆசிரியை பணியை துறந்து முழு நேர அரசியலில் உள்ளார். தற்போது, இயற்கை விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பில் சீதாலட்சுமி ஈடுபட்டு வருகிறார்.
2016 சட்டப் பேரவைத் தேர்தலின்போது பவானி தொகுதியிலும், 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். 2021-இல் ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சீதாலட்சுமி 39 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 95,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். தற்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் சீதாலட்சுமி களமிறக்கப்பட்டுள்ளார். பிரதான கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.