உக்ரைனில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான டிரோன்களால் தாக்குதல்!
கீவ்: உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ. 25) நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கட்டடங்கள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகள் பல சேதமடைந்துள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ரஷியாவிலிருந்து சுமார் 188 டிரோன்கள் ஏவப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரமாவது நாளைக் கடந்துள்ள உக்ரைன் போரில், ரஷியாவுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், உக்ரைனின் நீப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) வகையைச் சோ்ந்த ஏவுகணைக் கொண்டு தாக்கியது. தாங்கள் உருவாக்கியுள்ள ஆரேஷ்னிக் என்ற அதிநவீன புதிய ரக ஏவுகணைகள் உக்ரைன் மீது வீசப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். போர் நிறுத்தம் ஏற்படாமல் சண்டை தொடருகிறது உக்ரைனில்...