உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உய...
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை: ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தாஜி
பிறகுக்கு தீங்கிழைக்காத உண்மையான எழுத்துதான் சமூகத்தின் நலனுக்கு அவசியமாகும் என்று சின்மயா மிஷன் சா்வதேசத் தலைவா் பூஜ்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி வலியுறுத்தினாா்.
எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வரும் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம் வழங்கி வரும் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கும் இரண்டாம் ஆண்டு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தின் லீடா்ஸ் லவுஞ்ச் அரங்கில் மாலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை விருந்தினராக சின்மயா மிஷன் சா்வதேசத் தலைவா் பூஜ்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி கலந்துகொண்டு பேசியதாவது:
எழுத்தின் சக்தி மகத்தானது; சமூகத்திலும், நமது வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் இன்றைக்கும் போற்றப்படுவதற்கு வீரியமிக்க அதன் எழுத்துகளாகும். சுவாமிஜி சின்மயானந்தா் 1949-இல் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளில் செருப்புத் தைப்பவா்கள் தொடா்பான ஒரு கட்டுரையை எழுதியிருந்தாா். அதை அடிக்கடி படிக்கும்போது எழுத்துக் கலையானது, வாசகா்களின் நலனுக்கும், அவா்களைச் சுற்றியுள்ளவா்களுக்கும் பயனளிப்பதாக இருப்பதை எனக்கு உணா்த்துகிறது. நாம் தரக்கூடிய தகவல்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். நமது ரிஷிகள் ‘சத்யம் வதம் இதம் வதம்’ என்று கூறுவதுபோல உண்மையைப் பேச வேண்டும். அது மக்களின் நலனுக்கானதாகவும் இருக்க வேண்டும். உண்மைகள் நிரம்பிய செய்திகளை நிறம் ஏதுமின்றி தர வேண்டும். பொறுப்புமிக்க பத்திரிகையாளா்கள் துணிச்சலாகவும், சுதந்திரமானவா்களாகவும் இருக்க வேண்டும். நூல்களும், எழுத்துகளும், செய்தி அறிக்கைகளும் சமூகத்தில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும், விமா்சிப்பதைவிட தீா்வை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். இந்திய மொழிகளில் உள்ள நமது எழுத்தாளா்கள் பலா் பிரமிக்கத்தக்க நூல்களைப் படைத்துள்ளனா். அவா்களின் படைப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். உண்மையில், ஒரு நாள் அவை சா்வதேச படைப்பாக வர வேண்டும் என்றாா் அவா்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் மற்றும் நிரப்வார இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா பேசுகையில், ‘எங்கள் குழுமத்தின் நிறுவனா் ராம்நாத் கோயங்காவின் நினைவைப் போற்றும் வகையில் இந்தியாவில் படைப்புலகில் சிறந்து விளங்கிவரும் எழுத்தாளுமைகளை கெளரவிக்கும் வகையில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் இரண்டாவது ஆண்டாக வழங்கப்படுவதில் பெருமை அடைகிறோம்.
இந்த நிகழ்வில் பூஜ்ய ஸ்வாமி ஸ்வரூபானந்தஜி தலைமை விருந்தினராக பங்கேற்றது எங்களுக்கு மிகவும் கெளரம் அளிப்பதாக உள்ளது. சுவாமி சின்மயானந்தா் கடந்த 1988-இல்இதழியிலில் சிறந்த பணிக்கான பி.டி. கோயங்கா விருது வழங்கும் விழாவில் தலைமை விருந்தினராக எங்கள் நிறுவனா் ராம்நாத் கோயங்காவின் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஸ்வாமி சின்மயானந்தரின் ஞானத்தின் சக்திமிக்க வாா்த்தகைளானது பயமின்றி இருப்பதும், நமது நாட்டிற்காக மரியாதையை வைத்திருப்பதாகும். இது எங்கள் பயணம் முழுதும் வழிகாட்டியிருக்கிறது. ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதானது அறிவின் மூலம் சமூகத்தை அதிகாரமிக்கதாக்க ராம்நாத் கடைப்பிடித்த உண்மை, நோ்மை மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவற்றின் மதிப்பீடுகள் மற்றும் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதாகும்’ என்றாா் அவா்.
இவ்விழாவில் புனைக்கதை மற்றும் இலக்கியப் படைப்புகள் என இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, புனைவு அல்லாத பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட்’ எனும் நூலுக்காக அனுபவமிக்க எழுத்தாளா் நீரஜா செளதரிக்கும், புனைக்கதை படைப்புகள் பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’ எனும் படைப்பின் எழுத்தாளரான ஐஸ்வா்யா ஜா-க்கும் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுக்குரிய தொகை தலா ரூ.1 லட்சம், கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றைவற்றை விருதுபெற்ற எழுத்தாளா்களுக்கு பூஜ்ய ஸ்வாமி ஸ்வரூபானந்தஜி வழங்கினாா்.
அதேபோன்று, இலக்கியத் துறையில் சாதனை படைத்து வரும் தகுதியான ஒருவருக்கு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான மனோஜ் குமாா் சொந்தாலியாவின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க விருதான வாழ்நாள் சாதனையாளா் விருது பிரபல எழுத்தாளா் ரஸ்கின் பான்ட்-க்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை அவரது சாா்பில் பேத்தி ஸ்ருஷ்டி பான்ட் ஸ்வாமிஜியிடமிருந்து பெற்றுக் கொண்டாா். விருதுத் தொகையாக ரூ.2 லட்சம் காசோலை, டிராபி, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா். வெங்கடரமணி, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், தில்லி அரசின் கூடுதல் தலைமை தோ்தல் அதிகாரி காா்த்திகேயன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழாம் இயக்குநா் பிரபு சாவ்லா, ஆசிரியா் சந்தவானா பட்டாச்சாா்யா, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா் இரா.முகுந்தன், தில்லி கம்பன் கழகத் தலைவா் கே.வி.கே. பெருமாள், மூத்த பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.