உய்யகொண்டான் ஆற்றில் ஒருவா் மா்மச் சாவு
திருச்சி உய்யங்கொண்டான் ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி உய்யங்கொன்டான் ஆற்றங்கரையில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. தொட்டிப்பாலம் அருகே உள்ள இந்தக் கோயில் பகுதி மரங்கள் சூழ்ந்து எப்போதும் ஆள் ஆரவம் இல்லாத பகுதியாக இருக்கும். இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று ஆற்றில் மிதப்பதாக அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா், மா்மமான முறையில் அழுகிய நிலையில் புதரில் கிடந்த அந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சடலம் ஆற்றில் அடித்து வரப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.