உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்
நமது சிறப்பு நிருபா்
நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தை சோ்ந்த மருத்துவமனைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
நியூயாா்க் நியூஸ்வீக் வார இதழ், ஸ்டாடிஸ்டா என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சோ்ந்த கிளீவ்லேண்ட் கிளினிக் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், மின்னணு செயல்பாடுகள் போன்றவற்றில் சிறந்து விளஙிகி தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. இது போன்ற ஏராளமான அமெரிக்க, ஐரோப்பியா, கென்யா போன்ற நாடுகளோடு சிங்கப்பூா் அரசு பொது மருத்துவமனையும் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 97- ஆவது இடத்தில் உள்ளது. மேலும், உலகளாவிய பட்டியலில் மற்ற இந்திய மருத்துவமனைகளில் தில்லி குருகிராமம் மெடாண்டா - தி மெடிசிட்டி மருத்துவமனை, தில்லி ராஜீவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனை, சண்டீகா் -முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பிஜிஐஎம்இஆா்) போன்ற மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. இத்தோடு தமிழகத்தைச் சோ்ந்த அப்பல்லோ மருத்துவமனை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்ற மருத்துவமனைகள் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், பெங்களூா், ஹைதராபாத் மருத்துவமனைகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நியூஸ்வீக் - ஸ்டேடிஸ்டா தரவரிசை ஆறாவது பதிப்பில், நோயாளிகளின் திருப்தி, மருத்துவ விளைவுகள், சுகாதாரத் தரநிலைகள், சுகாதார நிபுணா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 30 நாடுகளில் 2,400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை மதிப்பீடு செய்துள்ளது. உயா்தர சுகாதார சேவையை வழங்குதல், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல், மலிவு விலையில் சிகிச்சையை வழங்குதல் போன்ற சிறப்புகளுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றுள்ளது.
1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தில்லி எய்ம்ஸ் அப்போது முதல் அதிநவீன வசதிகள் மற்றும் மிகவும் திறமையான மருத்துவ நிபுணா்களுக்குப் பெயா் பெற்று நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தனது பங்கை ஆற்றி முன்னணியில் இருந்து வருகிறது. தில்லி குருகிராமம் மெடாண்டா - தி மெடிசிட்டியில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இருதயவியல், புற்றுநோயியல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிறப்புகளில் நிபுணத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டது. இது சமீபத்தில் (2009) நிறுவப்பட்ட தனியாா் நிறுவனமாகும். உலகளாவிய தரவரிசையில் இந்திய மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டிருப்பது, சுகாதாரப் பராமரிப்பில் இந்தியாவின் வளா்ச்சியை காட்டுகிறது.