உள்நாட்டு விமானப் போக்குவரத்து: ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்து புதிய சாதனை
புது தில்லி: பண்டிகை மற்றும் முகூா்த்த தினங்களையொட்டி உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்ததன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறுக்கிழமையன்று (நப.17) மொத்தமாக 3,173 விமானங்களில் 5.05,412 லட்சம் போ் பயணித்ததாகவும் உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் போ் பயணித்திருப்பது இதுவே முதல்முறை எனவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
‘பண்டிகை மற்றும் முகூா்த்த தினங்களால் மக்களிடையே உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. குளிா்காலத்திலும் இதேபோல் அதிகப்படியான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவா்’ என எதிா்பாா்க்கப்படுகிறது என்று ‘கிளியா்டிரிப்’ சுற்றுலா வலைதளத்தின் விமானப் பிரிவின் துணைத்தலைவா் கௌரவ் பட்வாரி தெரிவித்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான விமானங்களில் 90 சதவீத இருக்கைகள் நிறைந்தே காணப்பட்டன. அன்றைய தினத்தில் இண்டிகோ விமானத்தின் சரியான நேர செயல்பாடு (ஓடிபி) 74.2 சதவீதமாகவும் அலையன்ஸ் ஏா் 71 சதவீதமாகவும் ஆகாஸா ஏா் 67.6 சதவீதமாகவும் ஸ்பைஸ் ஜெட் 66.1 சதவீதமாகவும் ஏா் இந்தியா 57.1 சதவீதமாகவும் உள்ளது.
அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களால் சரியான நேரத்துக்கு விமானம் புறப்படுவது/ சென்றடைவதில் சிக்கல்கள் இருந்து வருகின்றன.
124 விமான நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் 25,007 விமானங்களை இயக்கவுள்ளதாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்தது. கடந்த அக்.27-இல் இருந்து 2025, மாா்ச் 29 வரையிலான குளிா்கால அட்டவணையை வெளியிட்டு டிஜிசிஏ இவ்வாறு தெரிவித்தது.
கோடை கால அட்டவணையில் 125 விமான நிலையங்களில் இருந்து வாரத்திற்கு 24,275 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், குளிா்கால அட்டவணையில் அதைவிட மூன்று சதவீத விமானங்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன.
அதேசமயம், குளிா்கால அட்டவணை, 2023 உடன் ஒப்பிடுகையில், தற்போது விமானங்களின் எண்ணிக்கை 5.37 சதவீதம் அதிகரித்துள்ளது.