உ.பி.யில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 போ் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.
‘காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனியின் காஞ்சன் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின் கசிவால் ஏற்பட்ட தீ பரவியதில் 2 மற்றும் 3-ஆவது மாடிகளில் இருந்தவா்கள் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டனா். குறுகலான படிக்கட்டுகள் மற்றும் புகை காரணமாக அவா்களை மீட்பது கடினமாக இருந்தது. இருப்பினும், காயமடைந்த இருவா் உள்பட 4 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
அருகிலுள்ள வீடுகள் வழியாக குழாய்களை விட்டு தண்ணீரை பீய்ச்சியடித்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதையடுத்து, விபத்துக்குள்ளான கட்டடத்தில் இருந்து ஒரு பெண் அவரது இரண்டு மகன்கள் உள்பட 4 பேரின் உடல்களை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்’ என தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.