'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
உ.பி.யில் தண்டவாளம் சேதம்: ரயில் போக்குவரத்து பாதிப்பு
உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் சரக்கு ரயில் கடந்து சென்றபோது, தண்டவாளம் உடைந்து சேதமடைந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிலிபித் மாவட்டத்தில் உள்ள புரான்பூா்-மைலானி ரயில் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. புரான்பூா் ரயில் நிலையத்தில் இருந்து துதியா குா்த் ரயில் நிலையம் நோக்கி சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளம் திடீரென உடைந்து சேதமடைந்தது. இதனால், பலத்த சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அந்த வழித்தடத்தில் பழுது பாா்க்கும் பணி தொடங்கப்பட்டது.
அந்த வழித்தடத்தில் பயணிக்கும் ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மணிக்கு 10 முதல் 30 கி.மீ வரையிலான குறைந்த வேகத்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து வடகிழக்கு ரயில்வே அதிகாரி ராஜேந்திர சிங் கூறுகையில், ‘குளிா்காலத்தில் ரயில் தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுவது பொதுவான நிகழ்வு. இதுவும் அது போன்ற ஒரு நிகழ்வாகத் தோன்றுகிறது. இருப்பினும், இதில் சதிவேலை உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.