Q2 Results சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை எவை? | IPS Finance - 345 | NSE | BSE
ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - அதிர்ச்சி பின்னணி
நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் தமிழ்நாடு அரசின் மலிவு விலை உணவக திட்டமான அம்மா உணவகங்கள் கடந்த 2013- ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என மிக மிக குறைந்த விலையில் வழங்கப்படும் உணவுகளை உண்டு மக்கள் பலரும் பசியாறி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து 1 ரூபாய் இட்லிகளை ஹாட் பாக்ஸில் மொத்தமாக வாங்கிச் செல்லும் எதிரில் உள்ள கே.கே.எஸ் தனியார் உணவகத்தினர், அதே இட்லியை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 10, 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த மோசடி குறித்த போட்டோ, வீடியோக்கள் ஆதாரப்பூர்வமாக வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த மோசடி குறித்து பேசும் அக்கம்பக்கத்து கடைக்காரர்கள், " இந்த அம்மா உணவகத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ள இந்த தனியார் ஹோட்டலுக்கு அடிக்கடி ஹாட் பாக்ஸில் இட்லிகள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கி கொள்ளை லாபத்தில் விற்கிறார்கள். பசியுடன் வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்காமல் பரிதாபமாக திரும்பிச் செல்கின்றனர். புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்வதில்லை " என்றனர்.

இதனை நாம் ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம், "அம்மா உணவகங்களில் இருந்து மொத்தமாக யாருக்கும் பார்சல் தரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறோம். 5 நபர்களுக்கான உணவை பார்சல் கேட்டால் கூட அவர்களின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு தான் தர வேண்டும் என்கிற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் " என்றனர்.
கே.கே.எஸ் ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்ட நிலையில், இந்த விதிமீறல் குறித்து ஆய்வு மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
















