Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கும் சாயக்கழிவுகள்: 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிப்பு
ஊத்துக்குளி அருகே நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுகளால் 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியத்துக்குள்பட்ட கத்தாங்கண்ணி, அருகம்பாளையம், பல்லவராயன்பாளையம், இச்சிப்பாளையம், அணைப்பாளையம், ராக்கியாபாளையம், சிறுகழஞ்சி பாலத்தொழுவு உள்ளிட்ட கிராமங்களில் தென்னை, வாழை, பருத்தி, வெங்காயம், தக்காளி, மிளகாய், மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாய ஆலைகள் அதன் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக அணைப்பாளையம் குளம் மற்றும் நொய்யல் ஆற்றில் திறந்துவிடுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து அணைப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளா்ப்பும் உள்ளது. நொய்யல் மற்றும் குளங்களில் சாயக்கழிவுகளைக் கலப்பதால் அருகிலுள்ள கிணற்று தண்ணீா் மாசடைகிகறது. இதனால், கிணற்று நீரின் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
ஒருசில இடங்களில் சாயக்கழிவு கலந்த கிணற்று நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது பயிா்கள் கருகி சாகுபடி பாதிக்கப்படுகிறது. இந்த நீரை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் அளவுக்கு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாவட்ட நிா்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நீா்நிலைகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.