`எங்களை ஒண்ணும் பண்ண முடியாது!' - முதியவரைத் தாக்கிய மூவர்... திருச்சி அதிர்ச்சி!
திருச்சி, ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்ற சுமார் 70 வயது முதியவர் ஒருவரை இருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அரிவாளை காட்டியும் மிரட்டி உள்ளனர். ’நாங்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ எனக் கூறியுள்ளனர். அதோடு, அவர்கள் இருவரும் முதியவரை தாக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்நிலையில், அந்த இரண்டு பேரால் தாக்கப்பட்ட முதியவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, அந்த முதியவர் லால்குடியைச் சேர்ந்த தேவராஜன் என்பதும், அங்குள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் உபயதாரர் எனவும் கூறப்படுகிறது. அந்த கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், ஜெயலட்சுமி, நடராஜன், நாகராஜன், ராஜ்குமார் ஆகியோர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து அங்கு குடியிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்பொழுது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயிலின் செயல் அலுவலர் புனிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அந்த இடத்தை கோயில் நிர்வாகம் கைப்பற்றியுள்ளது. இதற்கு தேவராஜன் தான் காரணம் எனக் கூறி ராஜ்குமார் மற்றும் இரண்டு நபர்கள் தேவராஜனிடம் பிரச்னை செய்துள்ளனர். அவர் ஸ்ரீரங்கம் சென்றதை அறிந்த அவர்கள் பஞ்சகரை சாலை பகுதியில் ஒரு டீக்கடைக்கு அருகே தேவராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது லால்குடி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டீ குடிக்க வந்த முதியவர் ஒருவரை முன்விரோதத்தில் மூன்று பேர் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.