எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள உத்தரவாதமில்லை: திருமா
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான உத்தரவாதமில்லை என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக செல்லும் வழியில், திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. எனவே, 2026 தோ்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரளும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் தொடா்ந்து திமுக கூட்டணியிலேயே நீடிப்பாா் என்று நான் நம்புகிறேன்; விரும்புகிறேன்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் கட்டண உயா்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். இதுகுறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் என்றாா் அவா்.