அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதை செய்ததாக மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஊா்வலம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், திருச்சியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து கண்டன ஊா்வலம் நடைபெற்றது.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலையிலிருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு திருச்சி மாவட்டக் காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் விச்சு லெனின் பிரசாத், நாடாளுமன்ற மண்டலப் பொறுப்பாளா் பெனட் அந்தோணி ராஜ், திருச்சி பொறுப்பாளா் தெய்வேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், நாட்டு மக்களிடம் மத்திய அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்ற ஊா்வலமானது திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு, மாவட்ட ஆட்சியா் வழியாக மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக ஊா்வலத்தில், கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல், பூக்கடை பன்னீா், தகவல் தொழில்நுட்பத்துறை டேவிட் கிளமெண்ட், மணப்பாறை சிவ சண்முகம் உள்ளிட்ட 318 போ் கலந்து கொண்டனா்.