வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!
``என் வாசிப்புக்கு ஆசிரியர்களே காரணம்!'' - நெகிழ்ச்சியூட்டும் 60 ஆண்டுகால `புத்தக மனிதர்' மோகன்தாஸ்!
திருநெல்வேலியில் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், தனது 12-வது வயதிலிருந்து 60 ஆண்டுகளாக புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்.
அதற்கு சாட்சியாக வீடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ளன. அடர்ந்த புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்தபடி நம் உரையாடலைத் தொடங்கினோம்.
“நான் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 39 ஆண்டுகளாக லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றினேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம்வயதிலிருந்தே இருப்பதால், எல்லா நூலகங்களிலும் உறுப்பினராகவும், வாசகர் வட்டங்களிலும் முக்கியமானவராகவும் இருக்கிறேன்.
மருத்துவம், வரலாறு, மதம், கற்பனை (ஃபிக்ஷன்), இலக்கியம் என நான்கு–ஐந்து வகையான புத்தகங்களை ஒரே நேரத்தில் மாறி மாறிப் படிப்பேன்.
அவ்வாறு படிப்பதால்தான் தொடர்ச்சியாகப் படிக்க முடிகிறதென நினைக்கிறேன். ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடித்த பிறகு அதைப் பற்றிய குறிப்புகள் எழுதுவதும் என்னுடைய வழக்கம்.

என் ஆசிரியர்களே காரணம்! :
“நான் வாசிக்கத் தொடங்கியதற்கு காரணம் என் ஆசிரியர்கள். ஏழாம் வகுப்பில் மதனகோபால் ஆசிரியர் நடத்திய நளவெண்பா – சுயம்வர காண்டம், தமிழ் ஆசிரியர் கந்தசாமிப் பிள்ளை எடுத்துக்காட்டிய குகப்படலம், பதினொன்றாம் வகுப்பில் காந்திமதி நாதிப் பிள்ளை கற்பித்த Wordsworth – The Solitary Reaper, King Ozymandias ஆகிய பாடங்கள் – இந்த ஆசிரியர்களும் அவர்கள் நடத்திய பாடங்களுமே எனக்கு இலக்கியம் மீதான ஆர்வத்தை உருவாக்கின.”
என் வாசிப்பு பழக்கத்திற்கு விரோதி!
“ஒரு புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் என்றதை விட, ஒரு நாளுக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை படிப்பேன். தமிழ்ப் புத்தகங்களை வேகமாகவும், ஆங்கில நூல்களை மெதுவாகவும் வாசிப்பேன். ஆங்கில நூல்களில் புதுப் புதுவார்த்தைகள், அவற்றில் கூறப்படும் சிந்தனைகள் போன்றவை நேரத்தை அதிகப்படுத்தும். நேரம்தான் முக்கியம்; எத்தனை பக்கம் படிக்கிறோம் என்பதற்கான அளவுகோல் கிடையாது.
ஆதியில் என் படிப்புக்கு ஜென்ம விரோதி என் மனைவி. ஆனால் பிறகு என்னைப் போலவே அவரும் வாசிக்கத் தொடங்கிவிட்டார். இப்போது அவர் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகை. அவருடைய எழுத்தைப் படித்துப் படித்து, ‘ஏன் அவர் மெதுவாக எழுதுகிறார்?’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்” எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே மெல்ல சிரிக்கிறார்.

மனிதர்களின் ஜீவனமே வாசிப்பு தான்!:
“ வாசிப்புதான் மனிதர்களின் ஜீவனம். ஜலதோஷம் பிடித்தால்கூட நம் மக்கள் பயன்படுத்துகின்ற ஆன்டிபயாட்டிக்கை எதிர்த்துப் போராடுவதற்கு பாக்டீரியாக்கள் கற்றுக்கொள்கின்றன. தாவரங்களுக்குக்கூட உணர்வுகள் உள்ளது. அவையும் பேசிக்கொள்கிறது. ஒரே வித்தியாசம் மனிதனே அவற்றைச் சேகரிக்கிறான் (Record).
ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஒருவர் எழுதியதை இன்று ஒருவர் படித்து மனிதனின் அன்றைய சிந்தனை என்ன? என்று இன்று நம்மால் படிக்க முடியும் என்ற இந்த ஒரே முக்கியமான பெனிஃபிட்தான் மனிதனுக்கும் மற்றவைக்கும் உள்ள வித்தியாசம். இரண்டாவது படிப்பவனும், எழுதுபவனும் சேர்ந்து உருவாக்குவதே இலக்கியம். நாம் சினிமாக்களில் காட்சிகளை அப்படியே உள்வாங்குகிறோம்.
ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. வாசகன் எழுத்தாளன் இருவரின் சிந்தனைகள் சேர்ந்து உருவாகுவது இலக்கியம். மேலும் வாசிப்பு மரியாதையைத் தந்திருக்கிறது. நான் புத்தகம் வாசிப்பதால் நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்திருக்கிறேன்.'
அம்பாசமுத்திரத்தில் நிறைய வாசகர்சாலைகள் உள்ளன. சாயங்கால நேரத்தில் காமராஜ், குமரன், நேரு போன்ற படிப்பகங்களில் நிறைய பேர் படித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒரு நாள் நன்கு பார்த்தபோது, லைப்ரரியன் ஒருவர், “உள்ள வாடே, நீ படிப்பதற்கான புத்தகம் எல்லாம் அங்கு தனியாக இருக்கு” என்று சொன்னார். அந்த வரவேற்பு எனக்கு முக்கியமான ஒன்று.
குழந்தைகளுக்கான இதழ்களான கண்ணன், கல்கண்டு, பூந்தளிர், அம்புலிமாமா என அனைத்தையும் நான் படித்துவிடுவேன்.
அப்போது அட்டெண்டர் ஒருவர் “இந்தப் புத்தகத்தைப்பற்றி” என்று கூறியபோது தொடங்கிய ஆர்வம், இன்று வரை புத்தகத்தோடு என் நடத்தை தொடர்கிறது. நான் செல்கிற எல்லா ஊர்களிலும், லைப்ரரியனும் நண்பர்கள்தான். வேலைக்குச் சேர்ந்த பிறகு என் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை புத்தகங்களுக்கே ஒதுக்கிவிட்டேன்.
என்னை உற்சாகப்படுத்துவதற்கு ஆள் இல்லை!
“ஆதியிலிருந்தே எழுதுகிறேன். துரதிஷ்டவசமாக, உற்சாகப்படுத்துவதற்கு ஆள் இல்லை, அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு வருடமாக நெல்லைக்கு ரயிலில் வேலைக்கு வந்தபோது, என் புத்தகப்பிரதியைக் கடைசி காம்பார்ட்மெண்டில் கொடுத்துவிட்டேன். அது வரிசையாக மாறிமாறி ஜங்ஷனில் மீண்டும் என் கைக்கு வருகிறது.
PDF ஆகவும், பிரிண்ட் (Print) ஆகவும் எடுத்தும் நிறைய பேருக்கு பகிர்ந்து இருக்கிறேன். பெரிய வரவேற்பு இல்லை. பிறகு நான்கு–ஐந்து வருடங்களாக Facebook-இல் எழுதி வருகிறேன்.”
“இந்த ஒரு வருடத்தில் பெரிய ரிவைவேல் வந்துவிட்டது போலிருக்கிறது. புத்தகமும் நிறைய விற்கப்படுகிறது, ஆர்டர் செய்யப்படுகிறது. திருப்பூர், சென்னையில் எல்லாம் புத்தகங்கள் கடுமையாக விற்கப்படுகின்றன. புத்தகங்கள் குறைவாக விற்கப்படுவது பாளையங்கோட்டையில் மட்டுமே.

நம் ஊரில்தான் ஆசிரியர்கள் அதிகமாக இருந்தாலும், புத்தகம் அதிகம் படிக்கப்படாமல் இருக்க காரணம், சிலபஸ் தாண்டி படிக்க வேண்டிய எண்ணமும் ஆசிரியர்களிடம் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே படிப்பதில்தான் அறிவு விருத்தியாகும்.
திருநெல்வேலியில் எழுத்தாளர்கள் அதிகம் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. சிறுகதை என்றாலேயே புதுமைபித்தனைச் சொல்லாமல் இருக்கமுடியுமா? தோப்பில் முகமது மீரான் கொண்டாடப்பட வேண்டியவர். தன் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளைக் கூறி யாரையும் மோசமாக சித்தரிக்காமல் நேர்மையாக எழுதுவார். அதைப்போல தி.க.சி மிகப்பெரிய எழுத்தாளர்.
எனக்கு அவரிடம் கிடைத்த பெரிய லாபம் – நிறைய புத்தகங்களுக்கு அவர் விமர்சனம் செய்த பிறகு, அவற்றைப் பழைய புத்தகக் கடைக்கு போட்டுவிடுவார். விலை குறைவாக விற்கப்படுவதால் முதலில் போய் அவற்றை வாங்கி விடுவேன்” என புன்முருவலோடு சிரிக்கிறார்.
நீங்கள் விரும்பும் எழுத்தாளர்கள்
“தமிழ்வாணனின் எழுத்துக்களில் தொடங்கி வடுவூர் துரைசாமி ஐயங்கார், சந்திரமோகன், தேவன் போன்றோர்களின் நாவல்கள் மிகவும் ரசிப்பதற்குரியது.
பத்தாம் வகுப்புச் செல்கையில் கல்கியின் புத்தகங்கள் முழுமையும் படித்துவிட்டேன். தோழர் ஒருவர் எழுத்தாளர் James Hadley Chase அவர்களின் Tiger by the Tail நாவலைப் படிக்கத் தந்தபோது அதன் விறுவிறுப்பில் ஆழ்ந்தேன்.

அதன் பிறகு நீண்ட வருடமாக ஆங்கிலம் மட்டுமே படித்து, பின்னர் ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படிக்க அதில் தொடங்கி, தி.ஜானகிராமன் வரைப் பிடித்தேன். தி.ஜானகிராமனில் உள்ள கெட்டப் பழக்கமே அவரது கதாபாத்திரங்களில் ‘பிறன்மனை நோக்குதல்’ இடம்பெறுவதற்கு காரணமாகும்.
மேலும் Arthur Haileyயின் The Final Diagnosis என்ற புத்தகம் படிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. இந்த நாவலை மருத்துவத்துறையில் உள்ள அனைவரும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமென நினைப்பேன். மருத்துவக் கல்லூரியில் டிஎம்எல்டி ஸ்டூடண்ட்ஸாக வருகிற என் ஒவ்வொரு பேட்சுக்கும், முதல் வகுப்பில் The Final Diagnosis பற்றிக் கூறிய பிறகே வகுப்பைத் தொடங்குவேன்.
தமிழில் மிகவும் பிடித்தது ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். அதற்கு மட்டும் சரியான மொழிபெயர்ப்பு இருந்தால் அது நோபல் பரிசு பெற்றிருக்கும். தாகூரின் Creative Unity மிகவும் பிடித்தது.”

ஆங்கில அளவுக்கு தமிழ் நாவலில் இன்ஃபர்மேஷன் இல்லை. வெளிநாடுகளில் ஒரு சப்ஜெக்ட் பற்றியெழுத, அது குறித்த இன்ஃபர்மேஷன் தருவதற்கு ஏஜென்சிகள் உண்டு.
ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதிவிட்டாலேயே அவர்களுக்கு ராயல்டி அதிகம். இங்கு மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பட்டினிக்கிடந்துச் செத்து இருக்கின்றனர்.
ஜெயகாந்தன் மட்டுமே அதில் நின்று ஜெயித்துக் காட்டியுள்ளார். சார் சி.வி. ராமன் நோபல் பரிசு பெறும்போது அவர் உரையாற்றியது:
“இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாதென ஆங்கிலேயர்கள் நினைக்கின்றனர். அவர்களது முகத்தில் கரியைப் பூசவே இந்த விருதை நான் வாங்குகிறேன்” என்று பிரிட்டிஷ் இளவரசர் முன்பாகப் பேசினார். இதனை ஆங்கில எழுத்தாளர் Irwing Wallace எழுதியிருக்கிறார்.

இன்றைய தலைமுறையினருக்கு:
“இன்றைய தலைமுறையினர் நிறைய புத்தகங்களை தேடித் தேடி வாசியுங்கள், கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்கவில்லையெனில் நாம் மனிதர்களே இல்லை. கேள்வி Polite ஆக இருக்க வேண்டும், அவ்வளவுதான். மேலும் செயற்கை நுண்ணறிவு சரியான நேரத்தில் சரியான கடிவாளம் இடாமல்போனால், மனித குலத்திற்கு அது பெரிய அபாயமாக மாறும். அதனை கவனமாக பயன்படுத்த வேண்டும்” என மனம் நெகிழ பூரிக்கிறார் மோகன்தாஸ்.
மனிதர்களின் ஜீவனமே வாசிப்பு தான்
“வாசிப்புதான் மனிதர்களின் ஜீவனம். ஜலதோஷம் பிடித்தால்கூட நம் மக்கள் பயன்படுத்துகின்ற ஆன்டிபயாட்டிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கு பாக்டீரியாக்கள் கற்றுக்கொள்கின்றன. தாவரங்களுக்கும் உணர்வுகள் உள்ளன; அவையும் பேசிக்கொள்கிறது. ஒரே வித்தியாசம், மனிதனே அவற்றைச் சேகரிக்கிறான் (Record).

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒருவர் எழுதியதை இன்று ஒருவர் படித்து, மனிதனின் அன்றைய சிந்தனை என்ன? என்பதை நம்மால் அறிய முடியும். இதுவே மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உள்ள ஒரே முக்கியமான பெனிஃபிட். இரண்டாவது படிப்பவனும், எழுதுபவனும் சேர்ந்து உருவாக்குவதே இலக்கியம். நாம் சினிமாக்களில் காட்சிகளை அப்படியே உள்வாங்குகிறோம்.
ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. வாசகன் மற்றும் எழுத்தாளன் இருவரின் சிந்தனைகள் சேர்ந்து உருவாகுவது தான் இலக்கியம். மேலும் வாசிப்பு மரியாதையைத் தந்திருக்கிறது. நான் புத்தகம் வாசிப்பதால் நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறேன்.” என்கிறார் நெகிழ்ச்சியோடு.