`எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்' - இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்
எழுத்துலக ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திருவரங்கனின் திருவடியில் கலந்துவிட்டார்.
சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதைகள் என இவரின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. சித்தர்கள், மகான்கள், புராண-இதிகாசம் தொடர்பான இவரின் எழுத்தாக்கங்கள் வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றவை. விகடன் குழும இதழ்களிலும் இவரின் பங்களிப்புகள் நிறைய உள்ளன.
சக்தி விகடனில் வெளியான `சித்தம் சிவம் சாகசம்', சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியான `இறையுதிர்காடு' ஆகிய தொடர்கள் பெரிதும் பேசப்பட்டவை. குறிப்பாக, சக்தி விகடன் இதழில் அவர் எழுதிவந்த `ரங்க ராஜ்ஜியம்' தொடர் பற்றி அவசியம் சொல்லியாகவேண்டும்.
2017-ம் வருடம் மார்கழி மாதத்தின் ஒருநாள் ஆசிரியரை போனில் தொடர்பு கொண்ட இந்திரா செளந்தர்ராஜன், சக்தி விகடனில் ஆன்மிகத் தொடர் ஒன்றை எழுதலாமே என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். `ஆழ்வார்களை ஆராதிப்போம், சுந்தர காண்டம், கண்ணன் வருவான் எனும் வரிசையில் நான் எழுதப் போகும் தொடராக இது இருக்கும். வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதலாவதும் பூலோக வைகுண்டம் எனப்படுவதுமான திருவரங்கமே இந்தத் தொடரின் பிரதான களம்! அரங்கநாதப் பெருமாளே இத்தொடரின் நாயகன்! தொடரின் பெயர் ரங்க ராஜ்ஜியம். ஆரம்பிக்கலாமா...’ எனக் கேட்டார்.
ஆசிரியரும் மகிழ்வோடு ஒப்புக்கொள்ள 2018 ஏப்ரலில் தொடங்கியது ரங்கராஜ்ஜியம் தொடர். இஷ்வாகு வம்சத்தினரின் வழிபாட்டுக் காலம் தொடங்கி, சமகாலம் வரையிலுமான திருவரங்கத்தின் சரிதத்தை முழுமையாகத் தந்திருந்தார் இந்திரா செளந்தர்ராஜன். இந்தக் கோயிலுடன் தொடர்புடைய ஆழ்வார்கள், மகான்கள், ஆசார்ய புருஷர்கள், மன்னர்கள், திருப்பணிக் கண்ட பல ஆளுமைகள் ஆகியோர் குறித்து அவரளித்த தகவல்கள், பிரமிக்க வைப்பவை.
இந்தத் தொடரின் முதல் பாகம் விகடன் பிரசுர புத்தகமாக வெளிவந்துவிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து எழுதி வந்தார். அதன் நிறைவு அத்தியாயம் வரும் செவ்வாயன்று (12.11.24) கடைக்கு வரும் சக்தி விகடன் இதழில் வெளியாகும் நிலையில், அவர் நம்மிடையே இல்லை எனும் தகவலை மனம் ஏற்க மறுக்கிறது. நம்மிடம் பேசும்போது, `ரங்கராஜ்ஜியம் படிப்பவர்கள், திருவரங்கம் தொடர்பான தகவல்களை வேறெங்கும் தேடக்கூடாது. அனைத்தையும் உள்ளடக்கிய முழு ஆவணமாக இந்தப் புத்தகம் இருக்கவேண்டும். அதற்காகப் பெரிதும் முனைந்து எழுதுகிறேன்’ என்று அடிக்கடி சொல்வார் இந்திரா செளந்தர்ராஜன். இதன் பொருட்டு அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும் அர்ப்பணிப்பும் அளப்பரியது.
கடந்த வாரம் வியாழனன்று நிறைவு அத்தியாயம் தொடர்பாக தொலைபேசியில் பேசியபோது, அவர் பகிர்ந்த வார்த்தைகள், நெஞ்சம் நெகிழவைப்பவை.``ரொம்ப தேங்க்ஸ். பெரிய விஷயம் பண்ணியிருக்கோம்னு தோணுது. எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும். சக்தி விகடனும் நானும் கருவிகள்... அவ்ளோதான். நிறைய எழுதியிருக்கேன். ஆத்ம திருப்தின்னு பெரியவங்க சொல்வாங்களே... அப்படியான பூரணத்தை அபூர்வமா சில தருணங்களில் உணர்வது உண்டு. இப்போதும் அப்படித்தான்... `இந்திரா செளந்தராஜன் என்ன பண்ணினான்’னு கேட்டா... `பெருமாள் ரங்கராஜ்ஜியம் எழுதவெச்சார்... எழுதினேன்... அதுபோதும்’னு கம்பீரமா சொல்வேன்.
ரொம்ப திருப்தி எனக்கு. திருவரங்க சரித்திரத்தைச் சொல்லியிருக்கோம். இன்னும் திருவரங்கத்தில் பெருமாள் அனுக்கிரஹத்தால் நடந்த அற்புதங்கள் நிறைய உண்டு. அதுபற்றி தனியே ஒரு தொடர் எழுதலாம்... இப்போதைக்கு இந்தக் கடைசி அத்தியாயத்துல சின்னச் சின்னதான தகவல்களைக் கொடுத்து நிறைவு செஞ்சிருக்கேன்... மனசுக்கும் ரொம்ப நிறைவா இருக்கு..!’’ என மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசி முடித்தவர், சிறிது நிமிடங்களில் வாட்சப்பில் குறுஞ்செய்தியாக நமக்கு நிறைவாக அனுப்பியிருந்த செய்தி `மிக்க நன்றி!’.
அவர் அமரராகிவிட்ட தகவல் அறிந்தபின் மீண்டும் ஒருமுறை நிறைவு அத்தியாயத்தைப் படித்துப் பார்த்தோம்... அதில் சில வரிகள்....பிறப்பில் அரிய பிறப்பு மானுடப் பிறப்பு. மானுடருக்கே, தன்னை அறிந்து கொள்வதோடு பிறவற்றையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் அருளப்பட்டுள்ளது. அது எதற்காக என்றால், பிறவித் தளையிலிருந்து கடைத்தேற! ஆனால் நாமோ அதை அறிந்து கொள்ளாமல், கலி மாயைக்குள் சிக்கிப் பாவ புண்ணியங்களுக்கு ஆளாகி, அதன் பொருட்டுத் திரும்பத் திரும்பப் பிறப்பவர்களாகவே உள்ளோம். பாவமோ, புண்ணியமோ அதை அப்படியே அரங்கனுக்கு அர்ப்பணித்து விட்டால், நமக்கு மீண்டும் பிறப்பு என்பது இல்லை!’