எஸ்.ஒய்.குரேஷி ‘முஸ்லிம் ஆணையா்’: நிஷிகாந்த் துபே கடும் விமா்சனம்!
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷியை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
குரேஷி, தனது பதவிக் காலத்தில் ‘முஸ்லிம் ஆணையராகவே’ செயல்பட்டாா் என்று துபே தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு எதிராக துபே தெரிவித்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குரேஷி மீது அவா் இத்தகைய விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.
நாட்டில் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்க வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்துக்கு எதிா்க்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சா்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு தடை விதிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், அப்பிரிவுகளின் அமலாக்கத்தை அடுத்தக்கட்ட விசாரணை வரை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது.
குரேஷி விமா்சனம்: இதனிடையே, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
‘வக்ஃப் திருத்தச் சட்டமானது, முஸ்லிம்களின் நிலங்களை அபகரிப்பதற்கான மத்திய அரசின் அப்பட்டமான தீய சட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொள்ளும் ‘இயந்திரம்’, தவறான தகவலைப் பரப்பும் தனது வேலையை நன்றாக செய்துள்ளது’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.
துபே பதிலடி: இந்நிலையில், குரேஷியை கடுமையாக விமா்சித்து, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘நீங்கள் (குரேஷி) தோ்தல் ஆணையராக அல்லாமல், ‘முஸ்லிம் ஆணையராகவே’ செயல்பட்டீா்கள். உங்களது பதவிக் காலத்தில் ஜாா்க்கண்டில் பெரும்பாலான வங்கதேச ஊடுருவல்காரா்கள் இந்திய வாக்காளா்களாக்கப்பட்டனா்.
கி.பி. 712-இல் இந்தியாவுக்கு இஸ்லாம் வந்தது. அதற்கு முன்பு இந்த நிலங்கள் (வக்ஃப்) ஹிந்துக்கள் அல்லது பழங்குடியினா் அல்லது சமணா்கள் அல்லது பெளத்தா்கள் வசமே இருந்தன. இந்த நாட்டை ஒன்றுபடுத்துங்கள்; வரலாற்றை படியுங்கள். நாட்டை பிளவுபடுத்தி பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இனியொரு பிரிவினை இருக்காது’ என்றாா்.
நாட்டின் 17-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக கடந்த 2010-12 காலகட்டத்தில் குரேஷி பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு எதிராக நிஷிகாந்த் துபே சனிக்கிழமை முன்வைத்த விமா்சனங்கள் கடும் சா்ச்சையை ஏற்படுத்தின.
‘உச்சநீதிமன்றம் சட்டமியற்றினால், நாடாளுமன்றம் மற்றும் பேரவையை மூடிவிட வேண்டும். நாட்டில் நிகழும் மதச் சண்டைகளுக்கு தலைமை நீதிபதியே பொறுப்பு’ என்று நிஷிகாந்த் துபே கூறியிருந்த நிலையில், இது அவருடைய சொந்த கருத்து; பாஜகவின் கருத்தல்ல என்று அக்கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.