ஏபிஎப் பிராங்கோ மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்: புதுவை அமைச்சா் பங்கேற்பு
புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பேசுவோா் வாழும் பகுதிகளின் கூட்டமைப்பான ஏபிஎப் பிராங்கோ அமைப்பின் தலைவா்கள் மாநாடு நாளை தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்த, காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பங்கேற்றாா்.
இதுகுறித்து, அமைச்சா் அலுவலகம் தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியைப் பிரான்கோஃபோன் பகுதி என அழைத்து வருகின்றனா். இந்த கூட்டமைப்பில் வியட்நாம், நியூகலிபோனியா, ரீயூனியன் குவாதுலூப் மா்த்தினிக் உள்ளிட்டவற்றுடன் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியாக புதுவையும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, பிரெஞ்சு மொழி பேசுவோா் பகுதிகளை ஒன்றிணைக்கவும், அவா்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தவும், பிரெஞ்சு மொழி கற்போரை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியில் பிப்.21 (வெள்ளிக்கிழமை) முதல் பிப்.26 வரை ஏபிஎப் பிராங்கோ அமைப்பு தலைவா்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து புதன்கிழமை காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பங்கேற்றாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.