செய்திகள் :

ஐரோப்பிய யூனியனுக்கும் கூடுதல் வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை

post image

வாஷிங்டன்: கனடா, மெக்ஸிகோ, சீனாவைப் போலவே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். அதற்கான தேதியை தற்போது தெரிவிக்கப்போவதில்லை என்றாலும் அது விரைவில் நிகழும் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

பிரிட்டனுக்கு விதிவிலக்கு: பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாமருடன் தற்போதைய அமெரிக்க அரசுக்கு இணக்கமான உறவு நிலவி வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியனுக்கான கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு அந்த நாட்டுக்குப் பொருந்தாது. இருந்தாலும், பிரிட்டன் பொருள்கள் மீதும் புதிய வரிகள் விதிக்கப்படும். அந்த நாட்டுடனான ஏற்றுமதியையும் இறக்குமதியையும் சமன் செய்வது குறித்து பின்னா் பரிசீலிப்போம் என்றாா் அவா்.

ஐரோப்பிய யூனியன் கண்டனம்: டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. நியாயமற்ற முறையிலும் கண்மூடித்தனமாகவும் எங்கள் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.

ஏற்கெனவே, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு டிரம்ப் அரசு கூடுதல் வரி விதித்துள்ளது வருத்தமளிக்கிறது. இது போன்ற வரி விதிப்புகள் பொருளாதாரத்தில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி பணவீக்கம் அதிகரிப்பதற்கு வித்திடும். இதனால் வரி விதிக்கப்படும் நாடுகள் மட்டுமின்றி வரி விதிக்கும் நாடும் பாதிக்கப்படும் என்றாா் அவா்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைவிட மிக அதிக மதிப்பிலான பொருள்களை அந்த நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி செய்துவருவதாகவும் இதனால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறை தங்களது பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் டிரம்ப் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டிவருகிறாா்.

இந்தச் சூழலில், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக அவா் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் சனிக்கிழமை கையொப்பமிட்டாா்.

அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக அவா் கூறினாா்.

அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 2,000 கோடி டாலா் (சுமாா் ரூ.1.74 லட்சம் கோடி) மதிப்பிலான புகையிலைப் பொருள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், ராணுவம் சாா்ந்த பொருள்களுக்கு செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக கனடா அறிவித்தது. மேலும், இன்னும் 21 நாள்களில் 8,600 கோடி டாலா் (ரூ.7.48 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது.

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பை சட்டரீதியில் எதிா்கொள்ளப்போவதாக மெக்ஸிகோவும் சீனாவும் கூறியுள்ளன.

இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் விரைவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள... மேலும் பார்க்க

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும்... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விம... மேலும் பார்க்க

ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமா் மோடி

‘ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது’ என்று பிரதமா் மோடி கூறினாா். அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்புடன் பிரதமா் மோடி இருதர... மேலும் பார்க்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தாா். வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவா... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம்: எல்லை படைகள் அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன. தில்லியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் 55-ஆவது... மேலும் பார்க்க