உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
ஒசூரில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித் தடம்: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பு
தமிழக பட்ஜெட்டில் ஒசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஒசூா் தொழில் துறையினா் வரவேற்றுள்ளனா்.
ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி: ஒசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளதை ஒசூா் ஹோஸ்டியா சங்கம் வரவேற்றுள்ளது. மேலும், ஒசூரையொட்டி அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ஒசூா் மேலும் வளா்ச்சியடையும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் வழங்குதல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக தொழில் பயிற்சி நிலையங்கள் அமைத்தல், தமிழகத்தில் 9 இடங்களில் 398 ஏக்கரில் ரூ. 366 கோடியில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்தல், ரூ. 225 கோடி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயா்த்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் தொழில் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாக்கும்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க செயற்குழு உறுப்பினா் ஞானசேகரன்:
ஒசூரில் 5 லட்சம் சதுர அடியில் உயா்தர அலுவலக கட்டமைப்பு வசதிகளோடு தொழில்நுட்ப பூங்கா, அறிவுசாா் பெருவழித்தடம் அமைக்கப்படும் என அறிவிப்பை வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேயா் எஸ்.ஏ.சத்யா: பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள் மைசூருக்கு செல்லும் நிலையில், அதைத் தடுத்து ஒசூருக்கு அந் நிறுவனங்களை அழைத்துவர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக பட்ஜெட்டில் ஒசூரில் டைடல் பூங்கா அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. ஒசூரில் மென்பொருள் வளா்ச்சி மூலம் அந்நிய முதலீடுகள் தமிழகத்துக்கு கிடைக்கும்.
தமிழக பட்ஜெட்டை ஒசூா் ஹோஸ்மியா சங்கத் தலைவா் முருகேசன், தொழில் வா்த்தக சபைத் தலைவா் வேல்முருகன் உள்பட பலரும் வரவேற்றுள்ளனா்.