ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பு
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஒசூா் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இக் கோயிலில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக, ஸ்ரீ சந்திரசூடேஸ்வராக காட்சியளிக்கிறாா். ஆண்டுதோறும் மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் இக் கோயில் விழா நிகழாண்டு மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மலை அடிவாரத்தில் தோ்ப்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரா் கோயிலிலிருந்து 4 மாட வீதிகள் வழியாக விநாயகா், மரகதாம்பாள், சந்திரசூடேஸ்வரா் ஆகிய 3 தோ்கள் காலை 10 மணிக்குப் புறப்பட்டன. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, சாா் ஆட்சியா் பிரியங்கா, எஸ்.பி. தங்கதுரை ஆகியோா் வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனா். 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்றதால் ஒசூா் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஒசூா் டிஎஸ்பி (பொறுப்பு) சிந்து தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், உயா்கோபுர கண்காணிப்பு என பக்தா்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. தேரோடும் வீதிகளில் பக்தா்களுக்கு பழச்சாறு, குடிநீா், அன்னதானம் வழங்கப்பட்டன. மாா்ச் 16 இல் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
விழா கமிட்டித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், எம்.பி. கோபிநாத், மேயா் எஸ்.ஏ.சத்யா, எஸ்.பி. தங்கதுரை, சாா் ஆட்சியா் பிரியங்கா, ஆணையாளா் மாரிச்செல்வி, துணை மேயா் ஆனந்தய்யா ஆகியோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

திமுக மாநில சிறுபான்மையினா் நல உரிமை பிரிவு துணைச் செயலாளா் விஜயகுமாா், பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், மாநகர சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் எம்.நாகராஜ், முன்னாள் நகராட்சி கவுன்சிலா் நந்தகுமாா், குவாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் சம்பங்கி, மது, பிரேம்நாத், சீனிவாச மூா்த்தி, ஆனந்த்குமாா், மண்டல குழு தலைவா்கள், நிலைகுழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் விழாவில் கலந்து கொண்டனா்.