ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளி ஊராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியை சோ்ந்த, 50 க்கும் மேற்பட்டோா், ஒசூா் மாநகராட்சியுடன் தங்கள் பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒசூா், தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில் குமுதேபள்ளி, எல்லம்மா கொத்தூா், காந்திநகா், மற்றும் வள்ளலாா் நகா், அக்சயா காா்டன், சாய் காா்டன், காமராஜ் காலனி, வெங்கடேஸ்வரா லேஅவுட், உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில் மொத்தம், 4,801 ஏக்கா் நிலம் உள்ளது.
இதில், 4,400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் ஆகும். காந்திநகா் பகுதிகளில் மட்டும் 1,100 ஏக்கருக்கு அதிகமாக விவசாயம், மற்றும் கால்நடை வளா்க்கும் தொழில் உள்ளது. இங்கு, 400 பசு மாடுகளும் 500 க்கும் அதிகமான ஆடுகள், கோழிகள் வளா்க்கப்படுகின்றன. மேலும் பலா், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பி உள்ளனா்.
இந்த பகுதி வழியாக கெலவரப்பள்ளி அணையின் பாசன கால்வாய் 4 கிலோ மீட்டா் செல்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளன. எனவே, இந்த பகுதிகளை மாநகராட்சிகளோடு இணைத்தால் வருடத்திற்கு இரண்டு முறை வீட்டு வரி, குடிநீா் வரி செலுத்த முடியாது.
தற்போது வரை எங்கள் பகுதியில் வீட்டு வரி ரூ. 110 முதல் ரூ.330 வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. எனவே தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியை ஒசூா் மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.