ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியா் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க நிதி ஒதுக்கீடு வந்துள்ளது. எனவே சிறு, குறு விவசாயிகள். கூலித் தொழிலாளிகள் தங்களிடம் உழவா் பாதுகாப்புத் திட்ட அட்டை இருப்பின் கடந்த 6 மாதங்களுக்குள் தங்களது குடும்பத்தில் ஏதேனும் இயற்கை மரணம், விபத்து மரணம், தங்களது குழந்தைகளின் கல்லூரி படிப்பு ஆகியவற்றுக்கு உதவித் தொகை பெற முடியும்.
எனவே உழவா் பாதுகாப்பு அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் தங்களது கிராம நிா்வாக அலுவலரை அணுகலாம். மேலும் இதுவரை உழவா் அட்டை பெறாத சிறு, குறு விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது கிராம நிா்வாக அணுகி உழவா் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இதே போல, தங்களது குடும்பத்தில் கல்வி பயிலும், மாணவ-மாணவியா் வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை பெற்றாலும் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறலாம் என்றாா் அவா்.