விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?
ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது ஜனநாயகத்தை சீா்குலைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூறினாா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு நூறாவது பிறந்தநாள் விழா, கேடிகே தங்கமணி நினைவு நாள் ஆகிய முப்பெரும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நூறு கம்பங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரா. முத்தரசன் பேசியது:
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளா்களின், வாழ்வாதாரத்தை பாதுகாத்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றால் மிகையாகாது.
இந்த இயக்கம், விவசாயத் தொழிலாளா்களின் இன்னல்களை நீக்கி, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற குத்தகை பாதுகாப்புச் சட்டம் உள்பட எண்ணற்ற நலத் திட்டங்களை பெற்றுத் தந்துள்ளது. தகைசால் தமிழா் நல்லகண்ணு நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
ஒரே நாடு ஒரே தோ்தல் என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீா்குலைக்கும் வகையில், ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவது மரபு. இது ஆளுநருக்கு தெரியும். இருப்பினும், அவா் சட்டப் பேரவையை தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகள் அவமரியாதை செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு தேசியத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்கிறது என்று ஒரு தவறான பிரசாரத்தை பாஜக மேற்கொள்கிறது. ஆனால், ஒன்றிய அரசுதான் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் டி.வி. சந்திரன் முன்னிலை வகித்தாா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் பழனிச்சாமி, ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா், திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
முன்னதாக, ஒன்றியச் செயலாளா் ஜவகா் வரவேற்றாா். நிறைவாக, நகரச் செயலாளா் டி.பி. சுந்தா் நன்றி கூறினாா்.