ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
அமெரிக்காவில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான இடம்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கலிஃபொர்னியாவில் கிரிக்கெட் போட்டிகள்
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள போமோனா நகரத்தில் ஃபேர்கிரௌண்ட்டில்தான் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த நகரம் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 48 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ஃபேர்கிரௌண்ட் அல்லது ஃபேர்ப்ளெக்ஸ் எனப்படும் இடங்கள் பொதுவாக பொதுக்கூட்டங்கள், வணிக விளம்பரங்கள், கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருக்கின்றன.
போமோனாவில் உள்ள இந்த இடத்தில் இதுவரை கிரிக்கெட் திடலுக்கான நோக்கத்துடன் எந்த பிட்சும் அமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லைகளைத் தாண்டும் கிரிக்கெட்
இது குறித்து ஜெய் ஷா கூறியதாவது:
ஒலிம்பிக்ஸில் மீண்டும் கிரிக்கெட் வருவதற்காக முக்கியமான படியான 2028 ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு. அது ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும்போது வழக்கமான தனது எல்லைகளைத் தாண்டும். அதுவும் புதுமையான டி20 வடிவில் அறிமுகமாவதால் புதிய பார்வையாளர்களை கிரிக்கெட் சென்றடையும்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 1990இல் மட்டுமே கிரிக்கெட் பங்கேற்றுள்ளது. தற்போது, 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டுடன் மற்ற 4 விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.