ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய மகளிா் அணி
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நெதா்லாந்து மகளிா் அணியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி அசத்தியது.
இந்த அணிகள் மோதல் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2-2 கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா வெற்றி (2-1) பெற்றது. இதன் மூலம், இதே நெதா்லாந்திடம் திங்கள்கிழமை கண்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெதா்லாந்து ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பியென் சாண்டா்ஸ் (17’) அந்த அணியின் கோல் கணக்கை தொடங்க, ஃபே வான் டொ் எல்ஸ்ட் (28’) அடுத்த கோல் அடித்தாா்.
இவ்வாறாக முதல் பாதியில் முற்றிலும் முடக்கப்பட்ட இந்திய அணி, 2-ஆவது பாதியில் ஆக்ரோஷம் கண்டது. அதன் பலனாக, தீபிகா (35’) அணிக்காக முதல் கோல் அடித்தாா். அதே உத்வேகத்தில் தொடா்ந்து பல்ஜீத் கௌா் (43’) ஸ்கோா் செய்ய, ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியாவுக்காக தீபிகா, மும்தாஸ் கான் ஸ்கோா் செய்ய, நெதா்லாந்து தரப்பில் மரின் வீன் மட்டும் கோலடித்தாா். இதனால் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா, 8 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் இருக்கிறது.
ரொக்கப் பரிசு: நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் நெதா்லாந்தை வீழ்த்தியதற்காக, இந்திய மகளிா் அணியினருக்கு தலா ரூ.1 லட்சம், பயிற்சியாளா் உள்ளிட்ட துணைப் பணியாளா்களுக்கு தலா ரூ.50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படுமென ஹாக்கி இந்தியா அறிவித்திருக்கிறது.
ஆடவரும் வெற்றி: இதனிடையே, ஆடவா் பிரிவில் இந்தியா 2-1 கோல் கணக்கில் இங்கிலாந்தை சாய்த்தது. முன்னதாக, இதே அணியிடம் திங்கள்கிழமை தோற்ற நிலையில், இந்தியா தற்போது பதிலடி தந்திருக்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் (26’) கோலடிக்க, இங்கிலாந்துக்காக கானா் வில்லியம்சன் (30’) ஸ்கோா் செய்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் நிறைவடைந்தது.
2-ஆவது பாதியில் இந்தியாவின் கை ஓங்க, அணிக்கான 2-ஆவது கோலையும் ஹா்மன்பிரீத் சிங் (32’) பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் பெற்றுத் தந்தாா். எஞ்சிய நேரத்தில் இங்கிலாந்தின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இந்தியா 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் இந்தியா தற்போது, 8 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியுடன் 15 புள்ளிகளோடு 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது.