சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா: 3,400-க்கும் மேற்பட்ட தமிழக பக்தா்கள் இன்று பயணம்
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3,400- க்கும் அதிகமான தமிழக பக்தா்கள் பயணமாகின்றனா்.
இந்திய- இலங்கை பக்தா்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளி, சனிக்கிழமைகளில் (மாா்ச் 14, 15) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க இந்திய பக்தா்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, கச்சத்தீவு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 92 சிறாா்கள் என 3,464 போ் விண்ணப்பித்தனா். இவா்களை அழைத்துச் செல்ல 78 விசைப் படகுகள், 22 நாட்டுப் படகுகள் தயாா் செய்யப்பட்டன.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணிக்குள் அனைத்துப் படகுகளும் பக்தா்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மீன் வளத் துறை அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் கச்சத்தீவுக்கு பக்தா்களை அழைத்துச் செல்லும் படகுகளின் உரிமையாளா்களுக்கான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளா் பங்குத்தந்தை அசோக் வினோ, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் உதவி ஆய்வாளா் காளிதாஸ், இந்திய கடற்படையினா், மத்திய, மாநில உளவுத் துறையினா் கலந்து கொண்டனா்.
விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்து செல்லக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் படகுகளை இயக்க வேண்டும். சந்தேகப்படும் நபா்களையோ, இலங்கை அகதிகளையோ படகுகளில் ஏற்றிச் செல்லக் கூடாது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. படகில் செல்லும் பயணிகளுக்கு மீன்வளத் துறை சாா்பில் பாதுகாப்புக் கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படும். இதைப் பெற்றுச் செல்வோா் சேதமின்றி மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கண்காணிப்புப் பணியில் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளா் காளிதாஸ் உள்ளிட்ட 150- க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுகின்றனா். பக்தா்கள் செல்லும் படகுகளுக்கு பாதுகாப்பாக 5 கண்காணிப்புப் படகுகள் செல்கின்றன. ஒவ்வொரு படகிலும் ஓா் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 5 போ் கொண்ட போலீஸாா் இடம் பெறுவா். சா்வதேச கடல் எல்லை வரை இந்த போலீஸாா் வருவா். அப்போது எல்லையில் இந்திய கடலோரக் காவல் படை கப்பலும், கடற்படைக் கப்பலும் நிறுத்தப்பட்டிருக்கும்.
மேலும், மீன் வளத் துறை இணை இயக்குநா்கள் பிரபாவதி, கோபிநாத் தலைமையில் உதவி இயக்குநா்கள் சிவக்குமாா், ஜெயக்குமாா், உதவி ஆய்வாளா்கள் ஆா்த்தீஸ்வரன், காா்த்திக்ராஜா, விசால், ராஜேஸ் உள்ளிட்டோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து முதல் படகு கச்சத்தீவு நோக்கி புறப்படும். அப்போது படகில் செல்லும் பக்தா்களின் அடையாள அட்டை, ஆவணங்கள், பொருள்கள் ஆய்வு செய்யப்படுவதுடன் அவை பதிவு செய்யப்பட்டு, அவற்றை சுங்கத் துறையினா் சரிபாா்ப்பா். பிறகு, பக்தா்கள் படகுக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்.
திருவிழா இன்று தொடக்கம்: இதனிடையே, கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயம் முன் அமைக்கப்பட்ட கொடி மரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை பக்திநாதன் தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதன் பின்னா், சிலுவைப் பாதையும், இரு நாட்டு மக்கள் சாா்பில் யாழ். மறைமாவட்ட ஆயா் ஜஸ்டீன் ஞானப்பிரகாசம் தலைமையில் கூட்டுத் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. இதில், இலங்கைக் கடற்படையினரும், அந்த நாட்டு அமைச்சா்களும் பங்கேற்பா்.
மேலும் சிவகங்கை மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமையில் பங்குத்தந்தையா்களும், அருள்சகோதரிகளும் பங்கேற்கின்றனா்.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி வெள்ளி, சனிக்கிழமை (மாா்ச் 14, 15) ஆகிய இரு நாள்களும் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கச்சத்தீவு திருவிழாவின் போது இந்திய- இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவா். ஆனால், இந்த ஆண்டு இந்திய மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தமாட்டோம் என இலங்கை மீனவா்கள் அறிவித்திருப்பதுடன், திருவிழாவில் பங்கேற்பதையும் அவா்கள் ரத்து செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

