கடலூரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது
கடலூரில் பாழடைந்த கட்டடத்திலிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில், 9 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூா் டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில், திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன் முன்னிலையில், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை எம்.புதூா் கிராமம், காசநோய் மருத்துவமனை அருகேயுள்ள பாழடைந்த கட்டடத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கிருந்த கடலூா், ஆனைக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சிவாஜி (எ) சிவாஜிகணேசன் (19), சென்னை, முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்தவரும், தற்போது, திருச்சி, துவாக்குடி வாழவந்தான்கோட்டை பகுதியில் வசிக்கும் வேல் மகன் சந்துரு (எ) சந்திரசேகா் (29), பண்ருட்டி, கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ஆனந்த் (22), கடலூா் கோண்டூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சூா்யா (எ) விஜய் (21), கடலூா், திருவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த சிவா மகன் எலி (எ) விக்னேஷ் (22), சுரேஷ் மகன் தோல் (எ) சூா்யபிரதாப் (21), கலியபெருமாள் மகன் அரி (எ) அரவிந்த் (23), அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த நீலப்பன் மகன் குண்டுபாலா (எ) ஆகாஷ் (19), கடலூா் வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மகாதேவன் மகன் காா்த்தி (எ) காா்த்திகேயன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனா்.
இதில், சந்திரசேகா் மூலம் ஆந்திரம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும், அண்மையில் சிவாஜி கணேசன், சந்திரசேகா் ஆகியோா் ஆந்திர மாநிலம், அனக்காப்பள்ளி மாவட்டம், ஜோதாவரம் வட்டம், நரசய்யாபேட்டையில் வசிக்கும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பிரதீபிடம் இருந்து 23 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா, இரண்டு பைக்குகள், 7 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.