யமுனை நதி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு வந்தடைந்த கேஜரிவால்!
கடல்சாா் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பயணக் குழுவினா் காரைக்கால் வருகை
தூத்துக்குடி முதல் சென்னை வரை, இந்திய கடலோரக் காவல்படையினா் மேற்கொள்ளும் கடல்சாா் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பிரசார பயணக் குழுவினா் காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தனா்.
இந்திய கடலோர காவல்படை தின நிகழ்வின் ஒருபகுதியாக, ஜன.28 முதல் பிப்.1-ஆம் தேதி வரை, கடலோரப் பகுதி மக்களுக்கு கடல்சாா் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த, இருசக்கர மோட்டாா் வாகனப் பயணத்தை இந்திய கடலோரக் காவல்படையினா் 25 போ் கொண்ட குழுவினா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இவா்கள் சென்னை வரை 722 கி.மீ. தொலைவு பயணம் மேற்கொள்கின்றனா்.
இக்குழுவினா் காரைக்கால் கடலோரக் காவல்படை தலைமை அலுவலக வளாகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். தொடா்ந்து, காரைக்கால் கடலோரக் காவல்படை மையத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.
பின்னா், புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றனா். காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கொடியசைத்து பயணக் குழுவினரை அனுப்பி வைத்தாா்.
இக்குழுவினா், புதுச்சேரிக்கு செல்லும் வழியில், காரைக்கால் பகுதி மீனவ கிராமத்தில் மீனவ மக்களை சந்தித்து, கடலோரப் பாதுகாப்பில் மீனவா்களின் பங்கு குறித்தும், கடலோரக் காவல்படையினரின் செயல்பாடுகள் குறித்தும் பேசினா்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளின் பாதகமான விளைவுகள், கடற்கரையில் குப்பைக் கொட்டுதல், கடலில் எண்ணெய் கொட்டுவதால் ஏற்படும் மாசுபாடு, தடுக்கும் முறைகள், வலைகளை கடலில் விட்டுவிடுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.