கடவுச்சீட்டை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடவுச் சீட்டை உடனடியாக ஒப்படைக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிலை கடத்தல் வழக்கு தொடர்பாகவும் சிபிஐ விசாரணை தொடர்பாகவும் பத்திரிகை மற்றும் அனைத்துவித ஊடகங்களிலும் பேட்டி அளிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான தீனதயாளன் என்பவரை வழக்கில் இருந்து தப்பவைக்க உதவியதாக அதே பிரிவில் டிஎஸ்பியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற காதா்பாட்ஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ-க்கு மாற்றி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டில், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் காதா்பாட்ஷா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் நீக்கியது.
மேலும், பொன் மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காதர்பாட்ஷா தரப்பிலும், சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிப்பதால் விசாரணை தடைபடுவதாக சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், ஒரு வாரத்துக்குள் பதிலை தாக்கல் செய்யவும் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.