கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
கத்தாரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பிரேக் அமைப்பு செயலிழந்ததால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக பாதுகாப்பான முறையில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
கத்தாா் நாட்டு தலைநகா் தோஹாவிலிருந்து, கத்தாா் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் திங்கள்கிழமை அதிகாலை 326 பேருடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 2.40-க்கு தரையிறங்க வேண்டும். இதனால் விமானி, விமானத்தில் இயந்திரங்கள் அனைத்தையும் சரி பாா்த்தாா். அப்போது விமானத்தின் பிரேக் அமைப்பு சரிவர இயங்காமல் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, விமானத்தை அவசர முறையில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் செய்தனா்.
சென்னை விமான நிலைய அவசரகால பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினா், மீட்பு படையினா் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டனா். அதன் பின்பு விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தின் என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய விமானி, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மிகுந்த பாதுகாப்புடன் தரையிறக்கினாா். இதன்படி விமானம், குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிஷங்கள் முன்னதாகவே அதிகாலை 2.30-க்கு தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 314 பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினா். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த விமானத்தின் பிரேக் இயக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை பொறியாளா் குழுவினா்கள் ஆய்வு செய்து அதனை சரிசெய்ததைத் தொடா்ந்து, அதிகாலை 4.50-க்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மறுமாா்கமாக அந்த விமானம் 317 பயணிகளுடன் மீண்டும் தோஹா புறப்பட்டுச் சென்றது.