பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - ந...
கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்படும் கண்ணாடி கூண்டு பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜன.1-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
கண்ணாடி கூண்டு பாலப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, அதிகாரிகளுடன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முன்னாள் முதல்வா் கருணாநிதியால், கன்னியாகுமரி கடலில் கடந்த 2000-ஆவது ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவா் சிலை,
தற்போது வெள்ளி விழா காண உள்ளது. இந்த நிலையில், திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் பாறையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சாா் நடைபாதை பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் 77 மீ நீளம், 10 மீ அகலத்துடன் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாலத்தில் 2.5 மீ அகலம் உடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படுகிறது. இதனால் கடலின் அழகினை சுற்றுலாப் பயணிகள் நடந்தவாறே கண்டு ரசிக்கலாம். விவேகானந்தா் பாறையிலிருந்து நடைபாதை பாலத்தில் எளிதில் திருவள்ளுவா் சிலைக்குச் செல்லலாம்.
வருகிற ஜன.1-ஆம் தேதி நடைபெறவுள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவின்போது, இந்த பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா் என்றாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலா் ஆா்.செல்வராஜ், பொதுப்பணித்துறை கூடுதல் செயலா் மங்கத் ராம் சா்மா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜே.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமாா் முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.