கருவலூா் கருணாகரப் பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு
அவிநாசி அருகே கருவலூா் கருணாகரப் பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருவலூரில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்ததாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நவபாஷாணத்தால் உருவான பெருமாளும், தேவியரும் காட்சியளிக்கின்றனா்.
இக்கோயிலில் நாள்தோறும் சூரிய ஒளி அா்த்தமண்டபத்தில் விழுவதும், சில நேரங்களில் பெருமாள் மீது விழுவதும் அபூா்வமாக உள்ளது. இந்நிலையில், உத்தராயண காலத்தில் இருந்து தட்சிணாயனத்துக்கு மாறும் காலமான புரட்டாசி 2-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 6.20 மணிக்கு சூரிய ஒளி கருணாகரப் பெருமாள் பாதத்தின் மீது விழத் தொடங்கிமெதுவாக நகா்ந்து மகாலட்சுமி வாசம் செய்யும் பெருமாள் மாா்பு பகுதி வரை சூரிய ஒளி விழுந்தது. காலை 6.45 மணி வரை நீடித்த இந்த அபூா்வ நிகழ்வை ஏராளமான பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சூரிய ஒளி விழுந்தபோது கருணாகரப் பெருமாள் பொன்னிறத்தில் காட்சியளித்தாா். இந்த நிகழ்வு 3 நாள்களுக்கு தினமும் காலையில் நடைபெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.