போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் பணியாற்றிய மகாதேவன் (35), காவலராகப் பணியாற்றிய அருள்குமாா் (32) ஆகியோா் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காவல் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பு ஒரு மோட்டாா்சைக்கிளில் 3 போ் வந்தனா். அவா்களை போலீஸாா் 2 பேரும் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, மோட்டாா்சைக்கிளில் வந்தவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் காவலா் அருள்குமாரின் தலையில் கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பினா். இதையடுத்து, அருள்குமாா் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்தில் மகாதேவன் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
பின்னா், இந்த வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், மானூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (31), சுரேஷ்குமாா் (35), மாா்ட்டின் (41) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராஜ்குமாா், சுரேஷ்குமாா், மாா்ட்டின் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி மோகனவள்ளி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.