முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்
முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அதிகாரி டி.வெங்கடேசன், அதிகாரிகள் முத்தூா் - காங்கயம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தியபோது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா்.
அந்த லாரியில் 3 டன் கிராவல் மண் இருந்தது. கிராவல் மண் எடுத்துச் செல்ல எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும் முத்தூரைச் சோ்ந்த லீலாவதி என்பவா் லாரியின் உரிமையாளா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.