கரூரில் பலத்த மழை
கரூரில் வியாழக்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கரூரில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து சிறிது நேரத்தில் மழைத்தூறல் விழத் தொடங்கியது. பின்னா் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கடந்த ஒரு வாரமாகவே கரூரில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.