சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!
கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!
கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.
டி.கே. சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்த கருத்து மாநில ஆளுங்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, அமைச்சர் வீரப்ப மொய்லி அல்லது வேறு தலைவர்களின் கருத்துகள் முக்கியமல்ல, தலைமைதான் முடிவெடுக்கும், அதன்படி செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.
துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும், காங்கிரஸ் தலைவர் முதல்வர் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்ற சிவக்குமார், அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிக்க : முதல்வராகிறாரா சிவக்குமார்? கர்நாடக அமைச்சர், எம்எல்ஏக்கள் பேச்சால் சர்ச்சை!
உள்கட்சிப் பூசல்
கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற போதே, சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோரில் யார் முதல்வர் என்ற கேள்வி நிலவியது.
தலைமையின் பேச்சுவார்த்தையை சிவக்குமார் ஏற்றுக்கொண்ட நிலையில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், முடா வழக்கில் சித்தராமையாவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்ததால், அடுத்த முதல்வர் சிவக்குமார் என்ற பேச்சு மீண்டும் எழுந்தது.
”கர்நாடகத்தின் முதல்வராக வருகின்ற டிசம்பருக்குள் சிவக்குமார் பொறுப்பேற்பார்” என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி சிவகங்கா ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், “டி.கே.சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது, அவரது உழைப்புக்கு கிடைத்தது இந்த பதவி, பரிசாக அல்ல” என்று அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
சிவக்குமார் ஆதரவாளர்களின் கருத்தால் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.