கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1,673 பேருக்கு வீடுகட்ட ஆணை: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 1,673 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், முதல்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சத்தில் கட்டித்தரப்படும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கு கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் மொத்தம் 1,673 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்தக் குடிசைகள் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை, பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.