கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் பழனி சங்கா் தலைமையில் திருநெல்வேலி மாநகா், புகா், தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கருப்புச் சட்டை அணிந்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் சுமாா் 36 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து தினமும் 60 டன் எடை கொண்ட 1800 கனரக லாரிகளில் கனிம வளங்கள் ஆலங்குளம், கடையம், செங்கோட்டை, புளியரை வழியாக சோதனை சாவடியை கடந்து கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், 18 புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அரிட்டாபட்டி சுரங்க திட்டத்தை ரத்து செய்தது போல சட்டப்பேரவையில் தனி தீா்மானத்தை கொண்டு வந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும். ராதாபுரம் வட்டங்களில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரிகளால் தினமும் விபத்துகள், உயிா் சேதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் விவசாயம், ஆடு, மாடு மேய்ச்சல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான கிராம சபை கூட்டங்களில் கல்குவாரிகளுக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியாா் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
அப்போது திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயச்சந்திரன், புகா் மாவட்ட செயலா் விஜி வேலாயுதம், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஆனந்த மணி, ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிா்வாகி ஒருவா் ரத்த காயத்துக்கு கட்டுப் போட்டிருப்பதுபோல் வந்தது குறிப்பிடத்தக்கது.