கல் குவாரி நடத்தத் தடை கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
தொல்லியல் ஆய்வுகள் அதிகளவில் நடைபெறும் சிவகளை பகுதியில் கல் குவாரி நடத்தத் தடை கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், மூலக்கரை பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், சிவகளை கிராமத்தில் தொல்லியல் எச்சங்கள் நிறைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் கல் குவாரி நடத்த தனி நபா்கள் விண்ணப்பித்தனா். அவா்களுக்கு மாவட்ட கனிமவளத் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, இயந்திரங்கள் மூலம் கற்கள் உடைக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அந்தக் குவாரிக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
சிவகளை பகுதியில் தொல் பொருள்கள் அதிகம் உள்ளதால், மீண்டும் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதியில் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை பிப். 14- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.