மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? - காவல்துறை சொல்வது என்ன?
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் துவக்கம்!
காஞ்சிபுரம்: கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திர உத்திர பெருவிழா உற்சவத்தின் தொடக்க விழாவாக இன்று அதிகாலையில் சப்தமி திதி, பூச நட்சத்திரம், கூடிய சுப தினம் காலை மேஷ லக்னத்தில் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது.
சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு கச்சபேஸ்வரருக்கும் சுந்தராம்பிகை அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தடியில் எழுந்தருளச் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்கள் வைத்து தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவபெருமானின் வாகனமாகிய நந்தியின் உருவம் பொறித்த கொடியை தங்க கொடிமரத்தில் ஏற்றி வைத்து சித்திர உத்திர பெருவிழா உற்சவத்தை துவக்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர், சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் காலை,மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளார்.

சித்திரை உத்திர திருவிழா உற்சவத்தில் முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் 7-ஆம் நாளான வரும் வரும் 10ஆம் தேதியும், வெள்ளித்தேர்உற்சவம் வரும் 13ஆம் தேதி இரவும் நடைபெறவுள்ளது.
சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், நகர செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.
கொடியேற்ற உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காலை நேரத்திலேயே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.