காணாமல் போன தாத்தா வீடு... இப்போதும் தேடும் தலைமை நீதிபதி!? - வெளியான தகவல்!
இந்தியாவின் உயரிய பதவிகளில் ஒன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு. 50-வது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட்டின் பதவி காலம், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பொறுப்பேற்றார். இந்த நிலையில், அவர் தொடர்பான தகவல் ஒன்று வைரலாகிவருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்லும் போதெல்லாம், அங்கு அவருடைய தாத்தாவின் பூர்வீக வீடு ஒன்றை தேடிவருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் மூலம் வெளியான தகவலில், ``தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா எப்போதெல்லாம் அமிர்தசரஸ் செல்வாரோ அப்போதெல்லாம் கத்ராஷேர் சிங்கிற்குச் செல்வார். காலப்போக்கில் அந்தப் பகுதி முழுவதும் மாற்றம் கண்டாலும், இன்னும் அங்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஒரு வீட்டைத் தேடி வருகிறார். அந்த வீடு அவருடைய தாத்தாவுடையது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தாத்தா பழம்பெரும் நீதிபதி எச்.ஆர்.கண்ணாவின் தந்தை சரவ் தயாள். அவர், அவருடைய காலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்திருக்கிறார்.
1919 ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டியில் அவரும் ஒருவராக சேர்ந்திருந்தார். அப்போது சரவ் தயாள், ஜாலியன்வாலாபாக் அருகே கத்ராஷேர் சிங்கிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் டல்ஹவுசியிலும் ஒவ்வொரு வீட்டை வாங்கியிருக்கிறார். இதில், கத்ராஷேர் சிங்கில் இருக்கும் வீட்டைத்தான் நீதிபதி சஞ்சீவ் கண்ணா கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கத்ராஷேர் சிங்கில் உள்ள வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகு சரவ் தயாள் அந்த வீட்டைப் புரணமைத்திருக்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவர் தனது தந்தையுடன், கத்ராஷேர் சிங்கில் இருக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அந்த வீட்டில் தாத்தா என்று பொருள்படும் 'பௌஜி' என்று எழுதப்பட்ட பலகை இருந்தது. இந்த அடையாளம் இன்றும் ஹிமாச்சலில் இருக்கும் டல்ஹவுசியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. சரவ் தயாள் இறந்த பிறகு, 1970-ல் கத்ராஷேர் சிங்கில் உள்ள வீடு விற்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டைதான் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இன்றுவரை நினைவில் வைத்து தேடி வருக்கிறார். அதனால்தான் அவர் அமிர்தசரஸ் செல்லும் போதெல்லாம், கத்ராஷேர் சிங்கிற்குச் செல்கிறார்." எனக் கூறியதாக தகவல் பரவி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb