`காணி நிலம் வேண்டும்' -அனுபவப் பகிர்வு | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
மனிதர்களின் அடிப்படை தேவைகள் உணவு, உடை மற்றும் இருப்பிடம் என சிறுவயது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். ஆதிவாசிகளின் வாழ்க்கைச் சவால்களும் அதையொட்டிய முயற்சிகளும் தான் நாகரீகம், வளர்ச்சி என இன்றளவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு அடித்தளம்.
உணவு மற்றும் உடை இவை இரண்டையும் கொஞ்சம்தூர வைத்துவிட்டு, இருப்பிடம்.. வீடு என்கிற விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கும். கவிஞர்கள் மொழியில் வேண்டுமானால், உலகமே வீடு, வானமே கூரை என கூறலாம் . ஆனால் எவராலும் அவ்வளவு சுலபமாக வாழ்ந்து விட்டுப் போக முடியாது.
என்னுடைய சிறுவயது முதலே வீடு என்பது வாடகை வீட்டில் தான் கழிந்தது. சொந்தவீடு என்கிற கான்செப்ட்டில் என் குடும்பம் இல்லை போலும் அந்த நாள்களில். இத்தனைக்கும் என் தந்தை அரசாங்க அதிகாரியாக உயர் பதவியில் இருந்து ஊரிலுள்ள நிலங்களுக்கு பட்டா வாங்கித் தந்திருக்கிறார். அவரால் உதவி பெற்று வீடு நிலங்கள் என செட்டில் ஆனவர்கள் ஏராளம்.
நேர்மையான அதிகாரியாக இருந்ததாலேயே, அவருக்கு என்று ஒரு நிலத்தையும் அவர் வளைத்துப் போட்டு வீடு கட்டவில்லை. பணி ஓய்வு பெற்ற பின் , அப்போதுதான் அபார்ட்மெண்ட் என்ற ஒரு ட்ரெண்ட் ஆரம்பக்கட்டத்தில் இருந்த நிலையில் 500sq.ft இல் ஒரு வீடு வாங்கினார். அவ்வளவுதான்.. அதற்கு முன் வரை குடியிருந்த அனைத்துமே வாடகை வீடுகள் தாம். பெரியதோ, சிறியதோ குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் வீடு தாங்கிற்று. இடப்பற்றாக்குறை என்ற பேச்செல்லாம் அந்தக் காலக்கட்டங்களில் வந்ததே இல்லை.
இது ஹால், இது பெட் ரூம் என்ற பிரிவினைகள் இல்லை. சமையலறைக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருந்தன. சோஃபா, ஆளுக்கொரு பெட், தனித்தனி ஷெல்ஃப், வார்ட்ரோப்ஸ் இதெல்லாம் இருந்ததில்லை. முக்கியமாக ப்ரைவசி என்ற ஒரு வார்த்தையை யாரும் உபயோகப்படுத்தியதே இல்லை.
ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்குச் செல்லும் போது, டெம்போவோ, லாரியோ தேவைப்படாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து தனித்தனியாக ஒரு மூட்டையை நடந்தோ இல்லை சைக்கிளிலோ மிஞ்சிப் போனால் ரிக்ஷாவிலோ எடுத்துச் சென்றாலே வேலை முடிந்து விடும்.
என் அப்பா அவரின் கைப்பை மற்றும் கடிகாரம் இவை இரண்டையும் மட்டும் தான் தூக்கிக் கொண்டு வருவார்.
ஒன்று பண பரிவர்த்தனை செய்யும் ஒரே ஆள் குடும்பத்தில் அவர் மட்டும் தான். அதனால் கைப்பை எப்போதும் அவர் கையில் இருக்கும். இன்னொன்று அவருக்கு நேரம் மிக முக்கியம். அதனால் கடிகாரமும் அவருக்கு முக்கியம். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியதில்லை அவர்.
அப்படி ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து விட்டு, இப்போதைய காலக்கட்டத்தை நினைத்தால், வளர்ச்சி என்ற பெயரில் நான் அறிவை பெருக்கிக் கொள்ளாமல், வீட்டில் பொருட்களை பெருக்கி பெருக்கி, அவ்வப்போது வீடு மாறுகையில், சிலவற்றை கழித்து, மீண்டும் சிலவற்றை சேர்த்து.. எதற்காக இவற்றையெல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என சில சமயங்களில் குழம்பிக் கொண்டிருக்கின்றேன்.
என் வாழ்க்கையில் இதுவரை பெரும்பாலான நாள்கள் வாடகை வீடுகளில் தான் கழிந்திருக்கின்றன. சொந்த வீட்டில் மிகக்குறைந்த வருடங்கள் தான் வாழ்க்கைச் சென்றது. பல்வேறு காரணங்களுக்காக அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, நான் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நேற்று வரை வாடகை வீடு என்பது எனக்குப் பிடித்த ஒன்றாக இருந்து வந்தது. முக்கியமாக என் வீடு, என் பொருள்கள்., என் தோட்டம், இப்படிப்பட்ட பல பல என்,, என்,, நான்,, நான்,, எனது என்ற மனப்பான்மை வாடகை வீட்டில் எனக்கு வருவதில்லை. வாழ்க்கை temporary என்பது போல் வீடும் அதைச் சார்ந்த அனைத்தும் temporary தான்.
குடியிருக்கும் வீட்டில் தேவைப்படும் வரை இருப்போம். தேவைப்பட்டால் வேறு வீட்டிற்கு குடியேறி விடுவோம் என்ற மனநிலை இருந்தது.
ஆனால், குடியிருக்கும் வீட்டை காலி செய்து இன்னொரு வீட்டிற்கு செல்வது என்பது இப்போதைய சூழ்நிலையில் மிகக் கடினமான ஒன்றாக எனக்கு மாறியது.
ஒன்று உடலுழைப்பு. சாதரணமாக தினமும் வீட்டில் வேலைகள் எக்கச்சக்கம். இதில் ஷிஃப்ட்டிங் என்றால் அவ்வளவுதான். இதில் packers ஐ கூப்பிட்டால் அவ்வளவு தான். ஆட்கள் வீட்டில் நுழைந்து என்ன செய்கிறார்கள் என்றே நமக்குப் புரியாது. சில மணி நேரங்களில் எல்லாவற்றையும் பெரிய பெரிய பெட்டிக்குள் அடைத்து நாம் சொல்கின்ற இடத்தில் வைத்துவிட்டு, முன்னரே பேசிய தொகையை விட இன்னும் சற்று கூடுதலாக வாங்கிக் கொண்டுச் சென்றுவிடுவார்கள். மூட்டையைப் பிரித்தால் சில பொருள்கள் உடைந்து போயிருக்கும்.
உடையும் தன்மையுடைய பொருள்கள் எதுவாக இருந்தாலும் இனி சேர்த்து வைக்கக்கூடாது என நினைத்துக் கொள்வேன். அப்படி நினைத்துக் கொள்வதோடு சரி. செயலில் செய்து காட்டுவதில்லை.
இரண்டாவதாக இந்த வீடு மாற்றும் விஷயத்தில் பண விஷயங்களில் எப்படி இருக்கவேண்டும் என்றே தெரிவதில்லை. முன்பிருந்த வீட்டின் சொந்தக்காரர், அட்வான்ஸ் தொகையில் இருந்து கணிசமான அளவை பிடித்துத் தான் பாக்கியை தருகிறார். வீட்டை எந்த விதத்திலும் நாசம் செய்யாமல், அப்படியே திருப்பிக் கொடுத்தாலும், பெயின்ட் சார்ஜ், டீப் க்ளீன்ங் என ஏதோ ஒரு லிஸ்ட் தான் பதிலாக வருகிறது..
முன்பு குடியிருந்த வீட்டில் இருந்த ஏதோ ஒரு சிறிய பற்றாக்குறைக்காக வேறு வீட்டை நோக்கிச் செல்லும் போது, அதில் விரயமாகும் பணத்தை நினைத்துப் பார்க்கும் போது, இந்த ஷிஃப்ட்டிங்க் தேவைதானா என்ற கேள்வியை மனம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
ஷிஃப்ட்டிங்க் என வரும்போது, ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு நியாயங்களைப் பேசி பணம் வாங்கிக் கொண்டு விடுகின்றனர். யாரிடம் மறுப்பு தெரிவிக்க வேண்டும், யாருக்கு ஐயோ பாவம் பார்க்க வேண்டும், எனப் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.
கடைசியாக ஒரே நாளில் ஷிஃப்ட்டிங்க் என்ற பெயரில் பலரிடமும் பல ஆயிரங்களை இழந்துதான் மிச்சம்.
எனக்கு இதுவரை சொந்த வீடு, நிலம் என்பதில் எல்லாம் ஈடுபாடே கிடையாது. பற்றற்ற வாழ்க்கையை நான் பின்னாளில் வாழ இவையெல்லாம் இடைஞ்சல்கள் என நினைத்துக் கொள்வேன். ஆனால் இம்முறை வீடு மாற்றியதில் என் மனம் லேசாக மாறிவிட்டதோ எனத் தோன்றியது.
முதன் முறையாக என் பிள்ளைகளிடம்,, நீங்க ரெண்டு பேருமே, ஃப்யூச்சர்ல் உங்களுக்குன்னு ஒரு இடம், வீடுன்னு வாங்கி செட்டில் ஆகுற வழிய பாருங்க... என என் வாயில் வார்த்தைகள் தானாக வந்து விழுந்தது!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...